பக்கம்:அணியும் மணியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உணர்ந்த மந்தரை, அவளுக்குத் தக்க அமைதி எடுத்துரைக்க முற்படுகிறாள். எடுத்துச் சொல்வதில் தக்க நியாயம் இருக்கிறதா என்பதைப் பற்றி அவள் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. சொல்லுவதைப் பொருந்துமாறு சொல்லி எப்படியாவது நியாயம் உண்டு என்று எடுத்துக் காட்டுவதே அவள் நோக்கமாக அமைகிறது. எவ்வளவு சொன்னால் அவள் மனம் மாறுமோ அவ்வளவும் சொல்லி அவள் மனத்தை அமைதியுறச் செய்வதோடு, அவள் தன்னலத்தைக் கொழுந்துவிட்டு எரியுமாறும் செய்துவிடுகிறாள்.

"மூத்தவனுக்குத்தான் அரசு உரியது என்றால் மன்னன் தசரதன் இருக்கும் பொழுது இளையவனான இராமன் ஆட்சி பெறுவதில் என்ன வரன்முறை இருக்கிறது? என்ன ஒழுங்குமுறை இருக்கிறது?" என்று கேட்கிறாள். "தசரதனை நோக்க இராமன் இளையவன் தானே! அப்படியிருக்க, அவன் அரச முடி புனைந்து கொள்வதற்கு இசைந்தனன் என்றால் பரதனை மட்டும் அந்த அரசமுடி எவ்வாறு விலக்கிவிடும்? அவனுக்கு மட்டும் அதை அடைய உரிமையில்லையா? மூத்தவன் இருக்க இளையவன் ஆட்சிக்கு வருவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்று எடுத்துக் காட்டுகிறாள்.

மனச்சான்றை மயக்க ஏதாவது ஒரு காரணம் போதும் என்பதை நன்றாக உணர்ந்த மந்தரை இவ்வாறு கூறி, அவளை அமைதிப்படுத்துகிறாள்.

மூத்த வற்குரித்தரசெனும் முறைமையின் உலகங்
காத்த மன்னனில் இளையனன் றோகடல் வண்ணன்
ஏத்து நீண்முடி புனைவதற் கிசைந்தன னென்றால்
மீத்தருஞ் செல்வம் பரதனை விலக்குமா றெவனோ?
- 168


என்று கேட்கிறாள்.