பக்கம்:அணியும் மணியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சாய்ந்துவிடுகிறான். இவ்வளவு கொடுமையும் நேர்ந்த பிறகும், அவள் கொடுமையிலிருந்து சிறிதும் சலிப்புக் கொள்ளவில்லை. இரக்கமோ பரிவோ அவள் உள்ளத்தில் புகவில்லை. செய்கை முற்றிய சிந்தனையால் அமைதிகொண்டு அவள் ஆழ்ந்து உறங்கத் தொடங்குகிறாள். ‘செயல் முற்றியூறா நின்ற சிந்தனையினாளும் துயில்வுற்றாள்’ என்று கூறுகிறார்.

தன்னலம் தலையெடுக்கும் பொழுது ஆழ்ந்த பேரன்பும், அளியும், உள்ளத் தூய்மையும் மெல்ல எப்படி மறைந்து விடுகின்றன என்ற இயல்பைக் கைகேயியின் படைப்பில் மிக அழகாகக் கம்பர் காட்டுகிறார். நல்லவர்கள் என்று உலகம் மதிக்கும் சிலரும், உலகுக்கு அவர் செய்யும் நன்மையும் புகழ்ச் செயலும் அருட்செயலும் தன்னலம் என்ற பேயால் மறைக்கப்பெற்று, ஆசை என்னும் சூறாவளியால் அலைக்கப் பெற்று, எவ்வகைக் கொடுமைக்கும் துணிந்து நிற்பார்கள் என்பதைக் கைகேயின் தூயசிந்தை திரிந்த நிலையில், கம்பர் மெல்லமெல்லக் காட்டி நிலைநாட்டுவதைக் காண்கிறோம்.