பக்கம்:அணியும் மணியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஓசை நயத்தையும் தருகிறது என்பதுபற்றி, அணி நூலாரும் சொற்பின்வருநிலையணி என்று பாராட்டுவர். வந்த சொல்லே மீண்டும் வருவதால், அந்த ஒலிகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. அதனால் அவை உணர்த்தும் கருத்துக்களும் நம் மனத்தைவிட்டு அகலாமல் நிலைபெறுகின்றன.

யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு – 127

என்ற குறளில், 'கா', 'கா' என்ற ஒரே ஒலி மீண்டும் மீண்டும் வந்து செவியில் பட்டு, நாவைக் காத்தல் வேண்டும் என்ற நீதியை வற்புறுத்துகிறது.

பா, அடி, சீர், சொல் என்ற வகையில் சுருக்கத்தை ஆண்ட அப் பாவலர், எழுத்தினும், எழுத்தானாய அசைகளிலும் சுருக்கத்தை ஆண்டுள்ளமை அவர் குறளின் சொல் மாட்சியைக் காட்டுகிறது.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபி
னிற்க அதற்குத் தக – 391

என்ற குறட்பாவில் இரண்டாவது அடியில் முதற்சீரில் 'னி' என்ற ஒலியைத் தவிர வேறு மெல்லொலியே அமையவில்லை; முதலடியிலும் இரண்டாமடியிலும் வகர ஒலியைத் தவிர வேறு இடையொலியே அமையவில்லை. வல்லொலிகளையே முற்றிலும் அமைத்து, அவற்றிலும் ககரமும் றகரமும் மீண்டும் மீண்டும் ஒலிக்குமாறு செய்து, அவற்றை இயக்க அகர உயிரையே பலமுறையும் பயன்படுத்தி இகரத்தை இரண்டிடத்தில் மட்டும் துணைப்படுத்தி, ஒலியில் செறிவையும் ஒழுங்கையும் அமைத்து, ஒலியமைப்பில் சுருக்கத்தைக் கண்டது அவர் ஒலிகளிலும் கருக்கத்தைக் கையாளும் இயல்பைப் புலப்படுத்துகிறது. ஒரே வகையான ஒலிகள் காதில் படுவதால்