பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

7


யுடைய சக்கரத்துக்குத் தலைவி யென்பது ஒரு பொருள். மனோன்மணி: லலிதாம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று (207). மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள் என்பது பொருள். புருவமத்திக்கு மேலே பிரமரந்திரத்திற்குக் கீழ் உள்ள இந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதிநிலை உன்மனி அல்லது மனோன்மணியாம். இதன்கண் உறைதலின் தேவிக்கு இப்பெயர் வந்ததென்றும், பற்றற்ற மனம் இயங்கலற்று நிற்கும் நிலை உன்மனியாதலின் அந்நிலையில் அருள் புரிதல் பற்றி இங்ஙனம் வழங்கப் பெறுவாளென்றும் கூறுவர்.

நஞ்சு அமுதாக்கிய அம்பிகை: “எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும், வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைப் பாடுவனே" (மீனாட்சியம்மை குறம்). அம்பிகை - தாய், அம்புயமேல் திருந்திய சுந்தரி - தாமரையின் மேல் எழுந்தருளிய அபிராமி; பத்மாஸனா என்பது தேவியின் திருநாமங்களுள் ஒன்று. சுந்தரி, அபிராமி; ஒரு பொருளன. அந்தரி - பராகாச வடிவையுடையவள். அந்தரம் - ஆகாசம்; பராகாசா என்பது. அம்பிகையின் திருநாமம் (782). சிதாகாசத்தில் உறைபவளெனலும் ஆம். 'தஹராகாச ரூபிணி' (609) என்பது ஒரு திருநாமமாதலின் இங்கே தகராகாச உருவினள் என்பதும் பொருந்தும். இதயத்துள்ளே உள்ளது தகராகாசம்.

பாதம் இரண்டாயினும் ஒன்றுபோல வைத்துப் பேசிய படி; தொகுதி ஒருமை.

5

சென்னிய துன்பொற் றிருவடித்
தாமரை சிந்தையுள்ளே
மன்னிய துன் திரு மந்திரம்:
சிந்துர வண்ணப்பெண்ணே -
முன்னிய நின் அடியாருடன்
கூடி முறைமுறையே
பன்னிய தென்றும் உன் றன்பர்
மாகம பத்ததியே.

அபிராமி—3