பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

பேற்றையும் பல படியாக எடுத்துரைக்கின்றார். இவற்றைச் சிறிது கவனிப்போம்.

அபிராமியின் எழுதரிய திருமேனியின் ஒளி இருநிலமும் திசைநான்கும் பரந்து ஒளிர்வதைக் கண்டு இன்புற்றவர் ஆசிரியர். ஒளியும் மென்மையும் மணமும் உடைய அத் திருமேனியைத் தரிசித்து ஒளியே என்றும், கோமளமே என்றும், பரிமள யாமளையே என்றும் துதித்துக் களிக்கின்றார். உதிக்கின்ற செங்கதிரும், சிந்துரமும், மாணிக்கமும், மாதுளம் போதும், குங்கும நீரும், கமலமும் போன்ற அம்பிகையின் திருமேனி சில சமயங்களில் மின்னாயிரம் ஒருங்கு வந்தாற்போலப் பளிச்சிடுகின்றது. இப்படிச் செந்நிறம் பெற்றதோடு அம்பிகை பச்சைப் பசுங்கொடியாகவும், பொன்னிறம் பூண்ட பிங்கலையாகவும், வெண்ணிற மேனியினளாகவும், நீலநிறமுள்ள காளியாகவும் சில சமயங்களில் தோற்றம் அளிக்கின்றாள்.

அடியார்களுக்குப் பற்றுக்கோடாகிய அம்மையின் திருவடி மலர்களை, "எமக்கென்று வைத்த சேமம்” என்று போற்றுகின்றார். அவை மூவர் துதிப்பன; மறை பழகிச் சிவந்தன; மறைக்கும் அந்தமாவன; மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்றன. அத் திருவடியைத் தாமரையென்றும் பல்லவமென்றும் ஆசிரியர் புகழ்கின்றார். தம்முடைய தலையில் அத் திருவடியை வைத்து ஆட்கொண்ட சீலத்தை இவர் பெருமிதத்தோடு பாராட்டுகிறார் "நின் திருவடியை வைப்பதற்குச் சிவ பெருமான் திருமுடியையும் - வேதங்களையும்விட அடியேன் முடை நாய்த்தலை சால நன்றோ?” (60) என்று உருகுகிறார். அந்தச் சரணாரவிந்தங்கள் வேதமாகிய சிலம்பை அணிந்து விளங்குகின்றன.

மேல், அம்பிகையின் சின்னஞ் சிறிய மருங்கை வருணிக்கின்றார். துடியும் வஞ்சிக்கொடியும் மின்னலும்