பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



vi

அக் காலத்தில் தஞ்சையில் இருந்து அரசு புரிந்த மகாராஷ்டிர மன்னராகிய சரபோஜி அரசர் தை அமாவாசைத் தினத்தன்று காவிரிப்பூம்பட்டினம் சென்று புகார் முகத்தில் நீராடி மீண்டவர், இடையில் திருக்கடவூரில் தங்கினர். தங்கித் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தபொழுது வழக்கம்போல அபிராமியின் சந்நிதியில் அபிராமி பட்டரைக் கண்டார். யோகம் கைவரப் பெற்று மதமத்தராகிய அவருடைய தோற்றத்தைக் கண்டு அதிசயித்த மன்னர், 'இவர் யார்?’ என்று அருகில் உள்ளவர்களை வினவியபொழுது. அவ்ர்கள், 'இவர் ஒரு பித்தர்; வேத நெறி கடந்து, பரிவார சக்தியாகிய ஒரு தேவதையை வழிபடுகின்றவர்’ என்று சொன்னர்கள், அது கேட்ட மன்னர் ஏதாவது, ஒரு தலைக்கீடு கொண்டு அபிராமி பட்டரோடு பேச எண்ணி, 'இன்று அமாவாசை உண்டா? எவ்வளவு நாழிகை இருக்கிறது?’ என்று கேட்டார். சந்திர மண்டலத்து அமுதமயமாய் வீற்றிருக்கும் அம்பிகையைத் தம்முள்ளே தரிசித்து, அங்கே சூழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற திருக்கோலத்தில் ஈடுபட்டிருந்த பட்டர், மன்னருடைய வார்த்தைகள் காதில் அரைகுறையாக விழவே விழித்துக்கொண்டு, "இன்று. பெளர்ணமி' என்று சொன்னார். அருகில் இருந்தவர்கள் பிரமித்தனர். அவரைப்பற்றிக் குறை கூறியவர்கள் தாம் கூறிய கருத்தை மன்னர் நேரிலே உணர்ந்து கொண்டாரென்று மகிழ்ச்சி அடைந்தனர். சரபோஜி மன்னர் அவர்கள் கூறிய வார்த்தைகள் உண்மையென்றே எண்ணிப் பட்டரை மதியாமல் போய்விட்டார்.

அபிராமிபட்டர் உலக உணர்ச்சி பெற்றபோது தாம் தவறாகப் பெளர்ணமியென்று சொல்லிவிட்டதை எண்ணி வருத்தமுறலானார். தம்மைக் குறை கூறுவார் சொல் உண்மையென்று தோன்றும்படி வந்த நிலைக்கு இரங்-