பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. சென்னையில் ஜூடி

சிறிய மணிகளைப் போலச் சுவர்க்கோழிகள் இரவு முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தன. படுக்கையிலே குளிர்ந்திருக்கும் பகுதியில் புரண்டு படுக்க ஜூடி கண் விழிக்கும் பொழுது கொசுவலைக்கு வெளியே மங்கலாகத் தோன்றும் பெரிய ஜன்னலையும் கருஞ்சிவப்பான மலர்களைக் கொண்ட காகிதப் பூக்கொடியின் அசைவற்ற பூங்கொம்புகளையும் பார்த்தாள். சுவர்க்கோழிகளின் ஒலியும், சில வேளைகளில் ஒரு நாயின் குரலும் கேட்டன. வீடுகளைச் சுற்றி சுற்றிச் சென்று திருடர்களையும், பாம்புகளையும் பயமுறுத்தி ஓட்டும் கூர்க்கா காவல்காரன் தன்னுடைய கைத்தடியால் தரையில் தட்டி மனத்திற்கு திடமளிக்கும் அரவமூம் கேட்டது. காலை ஒளி படருவதற்குச்சற்று முன்பாகக் காக்கைகள் எழுந்து வேறு மரங்களுக்குப் பறந்து சென்று கா கா என்று கரைந்தன. பிறகு மைனாக்கள் ஒன்றோடொன்று ஏதோ பிதற்றிக்கொண்டு தோன்றின. சிலவேளைகளில் வேறு அழகான பறவைகளும் வருவதுண்டு. அதன்பின் பளிச்சென்று வேகமாக ஒளி படர்ந்தது.