பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆசிரியர் வரலாறு

சோழ நாட்டில் காவிரி நதியின் தென்கரையில் உள்ள தேவாரம் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகிய திருக்கடவூரில் சற்றேறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் அந்தணர் வகுப்பில் கெளசிக கோத்திரத்தில் அமிர்தலிங்க ஐயர் என்பவருடைய புதல்வராக உதித்தவர் அபிராமி பட்டர். அவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன் என்பது. பரம்பரை பரம்பரையாகச் சங்கீதப் பயிற்சியும், தேவி உபாசனையும் அமைந்த குடும்பத்தினராதலின் அவ்வந்தணர் இளமை முதலே திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபிராமியம்மையை மிக்க அன்புடன் வழிபட்டுவரலாயினர். தமிழிலும் வடமொழியிலும் சங்கீதத்திலும் அவர் கற்றுத் தேர்ந்தார். அபிராமியம்பிகை விஷயமாக ராக மாலிகையில் ஒரு கீர்த்தனம் பாடியதோடு அவ்வப்போது தம் உள்ளத்தே தோற்றிய பக்தி விளைவினால் பல துதிகளை அவ் வம்பிகையின் மீது பாடி வந்தார்.

உபாசனையில் சிறந்து நின்ற அவர் சரியை, கிரியை என்னும் இரண்டு சோபானமும் கடந்து யோக நிலையில் யாமளையின் திருக்கோலத்தை ஆதாரபீடங்களில் கண்டு கண்டு இடைப்பட்ட கிரந்திகளைத் தாண்டிச் சென்று பிரம்மரந்திரத்தில் ஸஹஸ்ரார கமலத்தில் ஒளி மயமாக எழுந்தருளியிருக்கும் லலிதாம்பிகையின்திருவருளின்பத்தில் திளைத்துப் பித்தரைப்போல ஆனந்தாதிசய வெறி மூண்டு உலவினர். அவருடைய அநுபவநிலையை உணராத சிலர், 'இவர் ஏதோ தேவதையை உபாசித்து அந்தணருக்கு மாறுபாடான ஆசரரங்களை மேற்கொண்டு பித்துப்பிடித்து அலைகிறார்' என்று ஏசத் தொடங்கினர். அவர்கள் ஏசுவதைக் காதில் வாங்காமல் அபிராமிசமயம் நன்றென்று கடைப்பிடித்து, 'உள்ளத்தே விளைந்த கள்ளால் உண்டான களியிலே' பெருமிதத்தோடு மிதந்து. வந்தார் அப்பெரியார்.