பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

47


அந்த அவமானமடைந்த நேரத்தில், அது மன அமைதிக்குத் தரும் மருந்தாக அமைந்துவிட்டாலும், அதுவே மனத்தைக் குத்திக்காட்டுகின்ற மாபெரும் அங்குசமாகவும் மாறிவிடுகின்றது.

அவமானத்தில் பேசிவிட்டு, பேசாமல் படுத்துக் கொள்வோர் அதிகம். அந்த நேரம் போய்விட்டாலே, ஆனந்தமாகத் தூங்கிக் காலம் கழிக்கும் அதிக சக்தி படைத்தவர்களும் அதிகம்.

சொல்லியதை செய்து காட்டிட வேண்டும் என்று சுய கெளரவம் பார்த்து, சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள் சிலர்தான். அவர்கள்தான் பொறியில் சிக்கிய எலியாக போராட்டத்தில் ஈடுபட்டு, சாதிக்க முயற்சிக்கின்றார்கள்.

நாம் எவ்வளவு சாதித்தோம் என்பதில்லை முக்கியம். நாம் எவ்வளவு முயற்சித்தோம் என்பதுதான் முக்கியம்.

முயற்சிகள் எல்லாம் பலனளித்து விடுவதில்லை. ஆனால் முயற்சித்தோம் என்கிற மன திருப்தி இருக்கிறதே! அதற்கு விலையே இல்லை. அதுதான் வாழ்வை மேம்படுத்தும் வசீகரத்துண்டுகோலாக இருந்து, ஒளியேற்றுகிறது, வழிகாட்டுகிறது.

நானும் இப்படித்தான் எலியாக சிக்கினேன். மலிவாகப் பலியாகிவிடக்கூடிய நிலைகளுக்கும் ஆளானேன். அந்தக் கதையைக் கேட்டால் ஏனிந்த வம்பு என்று நீங்களே கேட்பீர்கள்.

என்ன செய்வது? அவமானம் தந்த தன்மானம் ஆட்டிப்படைத்து விட்டது.

இருந்த வாடகை வீட்டிலிருந்து வெளியே வருகிற போது, சொந்த வீட்டில்தான் குடியேறுவேன் என்று சூளுரைத்து, சுற்றியிருந்து வேடிக்கைப் பார்த்தவர்கள் முன்னே கத்தி தீர்த்த பிறகுதான், கதையே தொடங்குகிறது. சென்னை ரெங்கநாதன் தெருவில் ஸ்போர்ட்ஸ் கடை