பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

69

பயிரவி பஞ்சமி பாசாங்
குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிர்அவி உண்ணும் உயர்சண்டி
காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி
சூலி வராகிஎன்றே
செயிர்அவி நான்மறை சேர்திரு
நாமங்கள் செப்புவரே.

(உரை) பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி. வஞ்சகர் உயிரைப் பலியாகக் கொள்ளும் உயர்ந்த பெருமையையுடைய சண்டிகாதேவி, காளி, விளங்குகின்ற கலைகளாகிய வயிரங்களுடைய சிறந்த வட்டமான மேகலையை உடையவள், மாலினி, சூலி, வராகி என்று குற்றம் தீர்ந்த நான்கு வேதங்களில் சேர்ந்த தேவியின்" திருநாமங்களை அறிந்தோர் கூறுவர்.

பயிரவி-அச்சம் தருபவளெனலும் ஆம்; இப்பொருள் கொண்டால் பின்னே வயிரவி எனவும் மண்டலியெனவும் தனித் தனியே பிரித்துப் பொருள் கொள்க. பஞ்சமி-சதாசிவத்தின் சக்தியாகிய பராசக்தி (லலிதா. 948); ஐந்தாவது சக்தியாகிய அநுக்கிரக சக்தி; “நீடு பஞ்சமி சூலினி மாலினி", "கவுரி பஞ்சமி யாயீ மாயீ" (திருப்புகழ்); "படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி", "கருத்திற் பயிலும் வராகியெம் பஞ்சமி", "பாடகச் சீறடிப் பஞ்சமி” (வராகி : மாலை, 4, 9, 19.) வஞ்சர் உயிர் அவி உண்ணுதல்; "கனை கழனினையல ருயிரவீ பயிரவி” (தேவேந்திர சங்க வகுப்பு). சண்டி-சண்டிகா; கோபமுடையவள் (லலிதா. 755.) காளி-கருநிறமுடையவள். கலா வயிர விமண்டலி: "மெய்ம்மறையார் கலையனைத்து மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா" (திருவிளை. 4: 34). மண்டலி எனத் தனியே கொள்ளின் சூரிய சந்திரமண்டலங்களில் வீற்றிருப்பவளெனப் பொருள்