பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அபிராமி அந்தாதி

இத்தலத்தில் தேவர் அமுதம் பருக அபிராமி அருள் செய்தாளென்பது புராண வரலாறு.

90.

மெல்லிய நுண்ணிடை மின்னனை
யாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்னனை
யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடி
யாரைத் தொழும்அவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பக
டூரும் பதம்தருமே.

(உரை) மெல்லிய நுணுகிய திருவிடை மின்னலைப் போல உள்ளவளை, விரிந்த சடாபாரத்தையுடைய சிவபிரான் தழுவிய மெல்லிய நகிலின் நிறம் பொன்னைப் போல இருப்பவளாகிய அபிராமியை, வேதம் புகழ்ந்து சொல்லியபடி வழிபடும் அடியவர்களைத் தொழுகின்றவர்களுக்கு அத் தேவி பல வாத்தியங்கள் ஆரவாரித்து எழ வெள்ளை யானையின் மேல் ஏறிச் செல்லும் இந்திர பதவியை அருள் செய்வாள்.

மறை சொல்லியவண்ணம் தொழுதலை முன்பும் (79) கூறினார். அடியார்க்கடியாரே இந்திர பதவி பெறுவாரெனின் அவ்வடியார் பெறும் பயன் அதனினும் பெரிதாம் என்பது குறிப்பு.

91

பதத்தே உருகிநின் பாதத்தி
லேமனம் பற்றிஉன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்
டாய்இனி யான்ஒருவர்
மதத்தே மதிமயங் கேன்அவர்
போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும்
போற்றும் முகிழ்நகையே.