பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

79

பெருங் கோயிலுள்" (மதுரைக் கலம்பகம், 103) என்பவற்றால் அந்நிலையும், "குரவரிருவரும் உற்றிடு துவாத சாந்தத் தொருபெரு வெளிக்கே, விழித்துறங்கும் தொண்டர்” (மீனாட்சி, அம்மானை. 3) என்பதனால் அங்கே சிவயோகிகள் பெறும் அனுபவமும் விளங்கும்.

உடம்போடுயிர் உறவு: "உடம்போ டுயிரிடை நட்பு” (குறள்). அறிவு மறக்கும்பொழுது: “அறிவழிந்திட் டைம்மே லுந்தி, அலமந்த பொழுதாக” (தேவாரம்).

89

வருந்தா வகைஎன் மனத்தா
மரையினில் வந்துபுகுந்
திருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லைவிண்
மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே.

(உரை) வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப் பாற்கடலிலே பிறந்த அமுதத்தை வழங்கிய கோமளையாகிய தேவி, அடியேன் ஜனன மரணங்களில் வருந்தா வண்ணம் என் இருதய கமலத்தில் தானே வந்து புகுந்து, அதுவே தன் பழைய இருப்பிடம்போல ஆகும்படி இருந்தாள்; இனிமேல் எனக்குக் கைவராத அரிய பொருள் ஒன்றும் இல்லை.

மனத்தாமரை: "என் சித்தாம்புயத்து மமர்ந்திருக்கும், தருணம் புயமுலைத் தையல்" (58). பழைய இருப்பிடமென்றது அம்பிகை வீற்றிருக்கும் தாமரையை. பொருந்தாதது ஒரு பொருளென்பது விகாரப்பட்டது. தேவர்கட்கு விருந்தை அளித்த மோகினி அம்பிகையின் அம்சமாதலின், 'புலவருக்கு விருந்தானதை நல்கும் மெல்லியல்' என்றார். "அமரர் வாழ்வு வாழ்வாக வவுணர் வாழ்வு பாழாக அருளுமோகி னீயாகி யமுத பான மீவாளே" (தக்க. 107).