பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அபிராமி அந்தாதி

(உரை) பிருதிவியும் அப்புவும் அக்கினியும் வேகமாகிய வாயுவும் படர்ந்த ஆகாசமும் ஆகிய ஐந்து பூதங்களிலும் முறையே பரவிய கந்தமும், சுவையும், ஒளியும், பரிசமும், சத்தமுமாகிய தன்மாத்திரைகள் இசையும்படி அவற்றினிடத்தே வியாபித்து நிற்கும் பரமேசுவரியாகிய சிவகாம சுந்தரியின் சிறிய திருவடிக்கண்ணே சார்ந்து நிற்கும் தவத்தை உடைய அடியார்கள் தமக்கே உரியனவாகப் பெறாத செல்வம் ஒன்றும் இல்லை.

எல்லாச் செல்வமும் அவர் அடைவர் என்பதாம்.

சக்தியின் அம்சம் யாண்டும் கலத்தலினால்தான் பார் முதலியன கந்தம் முதலியவற்றோடு இணைந்தன. சிவகாம சுந்தரி-தில்லைவாணர் தேவி; “தில்லை யூரர்தம் பாகத் துமை" (காப்பு).

68

தனம்தரும் கல்வி தரும்ஒரு
நாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும்
தரும்நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம்
தரும்அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாள்அபி
ராமி கடைக்கண்களே.

(உரை) மேகத்தைப் போன்ற, பூவை அணிந்த கேசபாரத்தையுடைய அபிராமியின் கடைக்கண்கள், அத்தேவியின் அன்பர்களுக்கு எல்லாவகை ஐசுவரியங்களையும் தரும்; கல்வியைக் கொடுக்கும்; ஒரு நாளேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும்; தெய்வீக அழகை வழங்கும்; மனத்தில் வஞ்சம் இல்லாத உறவினரையும் நண்பரையும் ஈயும்; இன்னும் எவை எவை நல்ல பொருள்களோ அவை எல்லாவற்றையும் வழங்கும்.