பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

எழு பெரு வள்ளல்கள்

கள். வள்ளிக் கிழங்குகளைப் பறித்தெடுத்துச் சுட்டுத் தின்றார்கள். மிகுதியாகத் தேனடைகள் இருந்தமையால் இனிய தேன் குடம் குடமாகக் கிடைத்தது. பல பல சுனைகளில் தெளிந்த நீர் இருந்தது. ஆகவே, கீழிருந்து உணவுப் பண்டம் வாராமையால் அவர்களுக்கு எந்த இடையூறும் நேரவில்லை.

சில மாதங்கள் முற்றுகை நடந்து கொண்டிருந்தது. மன்னர்கள், மேலே இருப்பவர்கள் எப்படி உண்டு வாழ்கிறார்கள் என்று அறியாமல் வியப்படைந்தார்கள். ஒரு நாள் அம்பிலே கோத்த ஓலையொன்று மேலிருந்து கீழே வந்தது. கபிலர் ஒரு பாடல் பாடி அனுப்பியிருந்தார். "மலைமேல் எங்களுக்கு மூங்கில் நெல் கிடைக்கிறது. பலாமரங்கள் கணக்கில்லாத பழங்களை வழங்குகின்றன. வள்ளிக் கிழங்குக்குப் பஞ்சமே இல்லை. எங்கே பார்த்தாலும் தேனடைகள் மலிந்திருக்கின்றன. வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போலத் தெளிந்த நீர்ச் சுனைகள் பல இங்கே இருக்கின்றன. ஆகவே எங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. நீங்கள் அங்கே ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு யானையாகக் கட்டி வைத்தாலும் சரி, பல பல தேர்களைக் கொண்டுவந்து நிறுத்தினாலும் சரி, உங்களால் பறம்பு மலையைக் கைக்கொள்ள முடியாது” என்ற கருத்து அந்தப் பாட்டில் இருந்தது. அதைக் கண்டு சேர சோழ பாண்டியர்கள் ஒன்றும் தெரியாமல் விழித்தார்கள்.

கபிலர் ஒரு தந்திரம் செய்தார். கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அவற்றைப் பறக்கவிட்டுக் கீழே வயல்களில் விளையும் நெற்கதிர்களைக் கொண்டு வரும்படி செய்தார். அப்பறவைகள் கொண்டு வந்த