பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 அப்பர் தேவார அமுது

வேண்டும். காய் கதிர் நீல ஒளி, வேலை நீல ஒளி ; நீலம்- நீல நிறம் பெற்ற ஆலகால விடத்தின் நிறம். மாமிடற்றர்-நஞ்சை உண்டதனால் கரியதாகத் தோற்றும் கழுத்தைஉடையவர்; மா-கரிய, கரிகாடு-உடம்பெல்லாம் சுட்டுக் கரியாகும் காடு ; சுடுகாடு. வேய் உடன் ஆடு-வேயை ஒப்பாக உடன் சொல்லும். அவருடைய தோற்றத்துக்கும் அவளுடைய அழகுக்கும் பொருத்தம் இல்லை என்பது குறிப்பு. தோளி அவள் : அவள், பகுதிப்பொருள் விகுதி. விம்ம-அச்சத்தால் நடுங்கிப் புலம்ப. வீசி-யானையைக் கொன்று; அதன் உரியைப் போர்த்து என்று இசையெச்சத்தால் வேண்டிய சொற்களைப் பெய்து பொருள் கொள்ள வேண்டும். ஏ : பரிகாசக் குறிப்ப. ஆடுமாறும் காணுமாறும் எத்தகைய பரிகாசத்துக்குரியவை என்று கொள்க. என்னே என்ற சொல்லை அவாய் நிலையால் கொண்டு பொருள் செய்ய வேண்டும். இயல்பே-இயல்பா; ஏகாரம், வினா.

இறைவன் யாவரும் இறந்துபட்ட மயானத்துச் சாம்பலைப் பூசிக் கொண்டு நிற்பது, அவன் நித்தியன் என்பதைக் காட்டுவது. அவன் நெற்றியின்மேல் உள்ள சந்திரன் திலகம் இட்டது போலத் தேயாமல் வளராமல் இருப்பதனால் அவனைச் சார்ந்தவர்கள் இடரின்றி வாழ்வதைக் குறிக்கும். திலகம் என்பது எந்த வடிவத்திலும் இருக்கும்; சிலர் பிறைச் சந்திரனைப் போலச் சந்தனத்தை இட்டுக் கொள்வது வழக்கம். தேவர்களெல்லாம் அஞ்சி மயங்கும்படி செய்த நஞ்சை உண்டதனால் இறைவன் எதனாலும் இறவாதவன் என்பதும். கருணையினால் பிறர் இடர்ப்பாடுகளை நீக்குபவன் என்பதும் புலனாகும். அவன் பல வீரச் செயல்களைப் புரிந்ததற்கு அடையாளமாகக் கழலை அணிந்திருக்கிருன். அந்தச் செயல்கள் யாவும் தேவரும் பிறரும் பெற்ற இன்னல்களைப் போக்குவதற்காகச் செய்தருளியவை. கஜாசுரனை அழித்து அவன் தோலைப் போர்த்தது, தன் அடியார்களுக்கு வரும் இன்னலைப் போக்கி அருள் புரிவதை அன்பர்கள் என்றும் நினைக்கும்படியான அடையாளமாகக் கொண்டபடி.