பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

7


வாழ்வும் வலிமையும்

ஆனந்தமான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது உடலேயாகும். அந்த உடலுக்குத் தேவை உறுதியாகும். உறுதியான உடலில்தான் அறிவும் ஆற்றலும் அளவில்லாமல் பெருகி நிற்கின்றன. பெருமை தருகின்றன. ஆற்றலும் ஆண்மையும், அத்துடன் ஆராய்ந்து அறிகின்ற அறிவுக் கூர்மையும் எப்பொழுதும் கொண்டு மனிதன் விளங்குவதால் தான், மனிதனுக்கு மற்றொரு பெயர் வலிமை என்றே கூறுகின்றார்கள்.

ஆற்றல் இல்லாத தேகத்தில் அழகு இல்லை. ஆண்மை இல்லை. அறிவும் இல்லை. அத்துடன் நில்லாமல் இன்னொன்றும் கூறலாம். அதாவது, அவர்கள் வாழ்வது வாழ்க்கையே இல்லை என்றும் கூறலாம்.

அவ்வாறென்றால் மனிதன் மாண்புமிகு இலட்சியம் தான் என்ன? அவனது இனிய வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன? உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான் அவனது இலட்சியமாகும். இரகசிய நுட்பமாகும். அதுவுமின்றி, அவனது தலையாய கடமையே என்றே கொள்ளவும் வேண்டும்.

உடலுக்கு வலிமையைப் பெறுவது உணவால் மட்டுமன்று உன்னதம் நிறைந்த உடற்பயிற்சியாலும்தான். இது உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. ஏற்றுக் கொண்டு நடக்கும் இனிய பாதை. உற்ற துணை என்று பற்றி நடந்து, பாங்குடன் செல்ல உதவும் பண்புமிகு வழிநடைத்துணைவன் என்றே உடற்பயிற்சியை நம்பிச் செய்கின்றார்கள். செல்கின்றார்கள். தெம்பினையும் திரண்ட தேகத்தையும் பெரிதும் பெற்றுக் கொள்கின்றார்கள்.