பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்

57

எதிர்த்தான். கடும் போராகத் தோன்றிய அது பிறகு எளிய போராகிவிட்டது. வேலை ஓச்ச முடியாமல் அதனைப் பிடித்த வீரர்களை ஆயின் படை வீரர்கள் கொன்றனர். எதிர் நிற்கமாட்டாமல் புறங் கொடுக்கத் தொடங்கினர் கொங்கர். ஆய் அவர்களை விடாமல் துரத்தினான். மேற்குக் கடற்கரை வரைக்கும் அவர்களே விரட்டி அடித்தான். இறுமாந்து ஆரவாரம் செய்துவந்த வேல் பிடித்த வீரர்கள் யாவரும் அப்படியப்படியே போர்க்களத்தில் வேல்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த வேல்களை யெல்லாம் பொறுக்கித் தன் ஊரில் ஓரிடத்தில் குவிக்கச் செய்திருந்தான் ஆய்; அவை மலைபோலக் குவிந்திருந்தன.

இந்த வீரச் செயலையும் ஆயின் கொடையையும் இணைத்து ஒரு பாட்டுப் பாடினர், மோசியார்.

“மணிகளைப் பதித்த அணிகலன்களை அணிந்த ஆய் வள்ளலே, நீ வருகிறவர்களுக் கெல்லாம் யானைகளை அளிக்கிறாயே! இப்படிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் இங்கே யானைக்குப் பஞ்சம் வந்து விடாதோ? அல்லது உன் நாட்டில் மட்டும் ஒரு பெண் யானை கருவுற்றால் ஓர் ஈற்றுக்குப் பத்துக் கன்றுகளைப் போடுமோ! வருகிற புலவர்களுக்கும் பாணர்களுக்கும் இனிய முகத்தோடு நீ வழங்குகிற யானைகளைக் கனக்குப்பண்ண முடியுமா? நீ கொங்கர்களை வென்று மேல் கடலுக்கு ஒட்டினபோது அவர்கள் களத்திலே போட்டுச் சென்ற வேல்களைத்தான் எண்ண முடியாதென்று நினைத்தேன். அவற்றையாவது எண்ணி விடலாம் என்று தோன்றுகிறது. நீ கொடுக்கும் யானையைக் கணக்குப்பண்ண முடியாது போல் இருக்கிறதே!' என்று சுவைபடப் பாடினார்.