பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/பொன்னனும் சிவனடியாரும்

விக்கிமூலம் இலிருந்து


பொன்னனும் சிவனடியாரும்[தொகு]

சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா?


இந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் பொன்னன் முகத்தில் வெளிப்படுத்திய போதிலும் வார்த்தைகளினால் வெளியிடவில்லை. வெளியிடுவதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவனைப் பார்த்தவுடனேயே, சிவனடியார், "பொன்னா! எவ்வளவு சரியான சமயத்தில் வந்தாய்? இப்போதுதான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன். உறையூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரம் கழித்து வந்திருந்தாயானால் என்னைப் பார்த்திருக்க மாட்டாய்..." என்று பரபரப்புடன் பேசிக் கொண்டே போனார். திண்ணையில் அவர்கள் உட்கார்ந்து கொண்டதும், "பொன்னா! சீக்கிரம் உன் சமாசாரத்தைச் சொல்லு! ரொம்ப முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். மகாராணியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" என்று கேட்டார்.


பொன்னன், "தெரிந்தது, சுவாமி!" என்றான். பிறகு, தான் கொல்லிமலை அடிவாரத்துக்குப் போனது. அருவியைப் பிடித்துக்கொண்டு மேலேறியது, அங்கே ஒற்றைக் கை மனிதனும் குள்ளனும் வந்ததைக் கண்டு மறைந்திருந்தது. அவர்கள் திரும்பி வருவார்களென்று எதிர்பார்த்து மூன்று நாள் காத்திருந்துவிட்டுத் திரும்பியது ஆகிய விவரங்களைச் சொன்னான். காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனைக் காப்பாற்றியது முதலியவற்றைச் சொல்லவில்லை. சிவனடியாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமென்று இருந்தான்.


ஒற்றைக் கை மனிதனுடைய தோற்றத்தைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி சிவனடியார் கேட்க, பொன்னன் அவ்விதமே அவனுடைய பயங்கரத் தோற்றத்தை வர்ணித்து விட்டு, "சுவாமி! அந்த மனிதன் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.


"பொன்னா! பார்த்திப மகாராஜாவின் பத்தினி அந்தக் கொல்லி மலையிலேதான் எங்கேயோ இருக்கிறாள் சந்தேகமில்லை. இதுவரையில் எனக்கு அர்த்தமாகாத விஷயங்கள் பல இப்போது அர்த்தமாகின்றன. அந்த மனிதன் யார் என்றா கேட்கிறாய்? - மகா புருஷர்களும் பக்த சிரோமணிகளும் தோன்றிய இந்தப் புண்ணிய நாட்டில் நரபலி என்னும் பயங்கர வழக்கத்தைப் பரப்பி வரும் மகா கபால பைரவன்தான் அவன். நானும் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறேன். அவனை நேருக்கு நேர் காண வேண்டுமென்று. இன்று வரையில் முடியவில்லை. அவனைப் பற்றி இன்னொரு சந்தேகம் எனக்கிருக்கிறது. பொன்னா! ஏன் என் கண்ணில் அகப்படாமல் அவன் தப்பித் திரிகிறான் என்பதை ஒருவாறு ஊகிக்கிறேன்; எல்லா உண்மையையும் சீக்கிரத்தில் நாம் இரண்டு பேருமாகக் கண்டுபிடிக்கப் போகிறோம். "பொன்னா! அதற்கு முன்னால் நமக்கு இன்னும் முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. உனக்கு இப்போது ரொம்பவும் ஆச்சரியமளிக்கும் விஷயம் ஒன்றைத் சொல்லப் போகிறேன். சோழநாட்டு இளவரசர் திரும்ப வந்திருக்கிறார்" என்று சொல்லிச் சிவனடியார் பொன்னனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார்.


அவனுடைய முகத்தில் சிறிது வியப்புக் குறி காணப்பட்டதே தவிர, குதூகலமும் மகிழ்ச்சியும் தோன்றாதது கண்டு, சிவனடியார், "என்ன பொன்னா உனக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார்.


பொன்னன் இன்னும் சிறிது ஜாக்கிரதையுடன், "தங்களுடைய வார்த்தையில் எனக்கு அவநம்பிக்கை ஏற்படுமா, சுவாமி? ஆனால், இவ்வளவு அபாயத்துக்குத் துணிந்து இளவரசர் ஏன் வந்தார் என்றுதான் கவலையாயிருக்கிறது" என்றான்.


"உண்மைதான் பொன்னா! இளவரசருக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது. உறையூருக்குப் போகும் பாதையிலேதான் ஏதோ நேர்ந்திருக்கிறது. நாம் உடனே கிளம்பிப் போய்ப் பார்க்க வேண்டும். அருள்மொழித் தேவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இளவரசரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.


பொன்னன் இப்போது உண்மையாகவே பேராச்சரியம் அடைந்தவனாய், "சுவாமி! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? இளவரசரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? அவருக்கு வழியில் ஆபத்து என்று என்ன முகாந்திரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.


"பொன்னா! இதென்ன உன்னிடம் இந்த மாறுதல்? நான் சொல்வதில் சந்தேகப்பட்டு முகாந்திரம் கேட்கக் கூட ஆரம்பித்து விட்டாயே? - நல்லது, சொல்கிறேன் கேள்! இளவரசரை நானே பார்த்தேன்; பேசினேன். நான்தான் உறையூருக்கும் அனுப்பினேன்...."


"எதற்காக சுவாமி?"


"எதற்காகவா? ஜன்ம தேசத்தைப் பார்த்துவிட்டு வரட்டும் என்றுதான். பொன்னா! ஒருவனுக்குத் தன்னுடைய பிறந்த நாட்டில் அன்பு எப்போது பூரணமாகும் என்று உனக்குத் தெரியுமா? கொஞ்ச காலமாவது அயல் தேசத்திலிருந்து விட்டுத் திரும்பிவரும் போதுதான். இரண்டு மூன்று வருஷம் அயல்நாட்டிலிருந்து விட்டு ஒருவன் திரும்பித் தன் தாய்நாட்டுக்கு வரும்போது, பாலைவனப் பிரதேசமாயிருந்தாலும், அது சொர்க்க பூமியாகத் தோன்றும். வளங்கொழிக்கும் சோழ நாட்டைப் பற்றிக் கேட்க வேண்டுமா? உங்கள் இளவரசருக்கு திரும்பவும் இந்நாட்டை விட்டுப் போகவே மனம் வராதபடி செய்ய வேணுமென்று விரும்பினேன்; பார்த்திப மகாராஜாவுக்குப் போர்க்களத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு. ஆனால் வழியில் இப்படி விபத்து ஏற்படக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. ஐயோ பகவானே! நாளை அருள்மொழி ராணி கேட்டால் நான் என்ன செய்வேன்!"


"சுவாமி! இளவரசருக்கு என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று பொன்னன் கேட்டான். "இன்றைக்கு ரொம்பக் கேள்விகள் கேட்கிறாயே, பொன்னா! என்ன ஆபத்து நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ நேர்ந்து மட்டும் இருக்கிறது. அதோ அந்தக் குதிரைக்கு, பகவான் பேசும் சக்தியை மட்டும் அளித்திருந்தால், அது சொல்லும்.... ஆமாம், இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டுதான் உங்கள் இளவரசர் கிளம்பினார். இதே இடத்திலிருந்துதான் புறப்பட்டார். ஆனால், இரண்டு நாளைக்குப் பிறகு குதிரை மட்டும் தனியாகத் திரும்பி வந்திருக்கிறது. இளவரசருக்கு எங்கே, என்ன நேர்ந்தது என்பதை நாம் இப்பொழுது உடனே போய்க் கண்டுபிடிக்க வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயல்லவா, பொன்னா! உனக்குக் குதிரை ஏறத் தெரியுமா?" என்று சிவனடியார் கேட்டார்.


"தெரியும் சுவாமி! ஆனால், நான் தங்களுடன் வருவதற்கு முன்னால் தங்களிடம் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றான் பொன்னன்.


"என்ன?" என்று சிவனடியார் தம் காதுகளையே நம்பாதவர் போல் கேட்டார்.


"ஆமாம் இன்னும் சில விவரங்கள் தெரியவேண்டும். முக்கியமாகத் தாங்கள் யார் என்று சொல்ல வேண்டும்" என்றான். சிவனடியாரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "ஓஹோ! அப்படியா?" என்றார்.


"சற்று முன்னால் சாலையிலிருந்து தாங்கள் குதிரைமீது வந்ததை நான் பார்த்தேன். அப்போது வேறு உருவம் கொண்டிருந்தீர்கள்; இந்த வீட்டுக்குள்ளேயே போய் வெளியே வரும்போது வேறு ரூபத்தில் வந்தீர்கள். ஆனால், இந்த இரண்டு உருவங்களும் தங்களுடைய சொந்த உருவம் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சந்தேகம் சுவாமி, எனக்கு வெகுநாளாகவே உண்டு. ஆனால், இப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. உண்மையில் தாங்கள் யார் என்று சொன்னால்...."


"சொன்னால் என்ன?"


"சுவாமி, மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... தாங்கள் அறிந்து கொள்ள விரும்பக்கூடிய விஷயம் எனக்குத் தெரியும், அதைச் சொல்லுவேன், இல்லாவிட்டால் என் வழியே நான் போவேன்...."


சிவனடியார் சற்று யோசித்தார். பொன்னனுடைய முகத்தில் உள்ள உறுதிக் குறியைக் கவனித்தார்.


"பொன்னா! அவசியம் நீ தெரிந்து கொண்டுதான் தீர வேண்டுமா?"


"ஆமாம், சுவாமி."


"அப்படியானால், சொல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. பரம இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்" என்றார்.


"அப்படியே செய்கிறேன், சுவாமி."


"போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்வாயா?"


"பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்கிறேன், சுவாமி!"


"அப்படியானால், இதோ பார்!" என்று சிவனடியார் அன்று போர்க்களத்தில் பார்த்திபன் முன்னால் செய்தது போல தம்முடைய ஜடா மகுடத்தையும் மீசை தாடிகளையும் நீக்கினார்.


பொன்னன், "பிரபோ! தாங்கள் தானா?" என்று சொல்லி, அவர் முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.


"இதற்கு முன்னால் வள்ளி உனக்குச் சொல்லவில்லையா? பொன்னா!" என்று சிவனடியார் (மீண்டும் ஜடாமகுடம் முதலியவற்றைத் தரித்துக் கொண்டு) கேட்க, "வள்ளி பெரிய கள்ளியாயிற்றே? நிஜத்துக்கு மாறான விஷயத்தைச் சொன்னாள். தங்களைத்தான் அவள் சொல்கிறாளா என்று நான் சந்தேகித்துக் கேட்டேன். இல்லை தாங்கள் பார்த்திப மகாராஜா என்று ஒரு பெரிய பொய் புளுகினாள். அவளை இலேசில் விடுகிறேனா, பாருங்கள்! எனக்கும் இப்போது ஒரு பெரிய இரகசியம் தெரியும். அதை அவளுக்குச் சொல்வேனா?" என்றான்.


பிறகு, பொன்னன் காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கி இளவரசரைக் காப்பாற்றியது முதல் அவரைக் குந்தவிதேவி தன் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றது வரையில் எல்லா விவரங்களையும் சவிஸ்தாரமாய்ச் சொன்னான். இதற்கு முன்னாலெல்லாம் எதற்கும் ஆச்சரியம் அடையாதவராயிருந்த சிவனடியார் இப்போது அளவிட முடியாத வியப்புடன் பொன்னன் கூறிய விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "பொன்னா! உங்கள் இளவரசரைப் பற்றிய கவலை தீர்ந்தது விக்கிரமன் பத்திரமாயிருப்பான். நாம் அருள்மொழி ராணியைத்தான் தேடி விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.