பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடதட கும்பக் களிறு

தம் மனைவியை அப்பால் போகச் சொல்லிவிட்டு, தம் கையைக் கூப்பிக் கும்பிட்டு வணங்கி, "தங்கள் திருவுள்ளப்படியே அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்" என்று கூறினார்.

முத்திநாதன் தன் வஞ்சகக் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். புத்தகத்தை எடுப்பவனைப் போல மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரை குத்திவிட்டான். இங்கே வென்றவர் யார்? முத்திநாதனா? மெய்ப்பொருள் நாயனாரா? மெய்ப்பொருள் நாயனாரை கொல்ல வேண்டும் என்பது முத்திநாதனின் கருத்து. அதை நிறைவேற்றி விட்டதால் முத்திநாதனுக்குத்தானே வெற்றி? தோற்றுப் போனவர் மெய்ப்பொருள் நாயனார்தாமே? அப்படி இல்லை என்கிறார் சேக்கிழார். மெய்ப்பொருள் நாயனாரே வென்றாராம். ஏன்? அவரது கொள்கை என்ன? சிவவேடத்தை மெய்ப்பொருள் என்று வணங்குவதுதானே? கத்தியை எடுத்துக் குத்த வந்த போதும் அவர் தொழுத கையை மாற்றவில்லை. முத்திநாதன் தரித்திருந்த சிவவேடம் மாறவில்லையே! ஆகவே உயிர் போகின்ற காலத்தும் தம் உயிரின்மேல் ஆசை கொண்டு தாம் கொண்ட கொள்கையை அவர் மாற்றவில்லை. உயிரைக் கொடுத்து கொள்கையை அவர் காப்பாற்றினார். ஆகவே தம் கொள்கையைக் கடைப்பிடித்து உயிருக்கு எதிரே நின்று வென்றார், மெய்ப் பொருள் நாயனார். இதைச் சொல்லுகிறார் சேக்கிழார் பெருமான்.
   "கைத்தலத் திருந்த வஞ்சக்
     கவளிகை மடிமேல் வைத்துப்
   புத்தகம் அவிழ்ப்பான் போன்று
     புரிந்தவர் வணங்கும் போதில்
   பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
   மெய்த்தவ வேட மேமெய்ப்
     பொருளெனத் தொழுது வென்றார்."

மெய்பொருள் நாயனார் பெரிய வீரர் என்று தெரிகிறதல்லவா? இத்தகைய ஞான வீரமே மெய்வீரம். மெய் வீரர்கள் பலர் வாழ்ந்த இடம் திருவண்ணாமலை. அங்கே வாழ்ந்தவர் அருணகிரிநாதர். ஆகவே அருணை, அடல் பொருந்தியது, வீரம் பொருந்தியது என்று சொல்லுகிறார்.

37