பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உடம்பில் உயிர் இருக்கிறது; மூன்று கரணங்கள் இருக்கின்றன. மனம், வாக்கு, காயம் ஆகியவை கரணங்கள். இவற்றோடு இயைந்து உயிர் இயங்குகிறது. உயிர் உடம்பினுள் புகுந்து இருப்பதனால் கரணங்கள் பல விதமான தொழில்களைச் செய்கின்றன. அந்தத் தொழில்களின் வாயிலாகக் கிடைக்கும் இன்ப துன்பத்தை உயிர் அநுபவிக்கிறது.

பெரும்பாலும் மூன்று கரணங்களாலும் மனிதன் தனக்கு வேண்டியவற்றையே செய்து கொள்கிறான். தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். தன்னைப் பற்றியே பேசுகிறான். தன்னைப் பற்றிய காரியங்களையே செய்கிறான். தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனம் பிறரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்; பிறர் துன்பங்களைப் பற்றியும் சிந்தித்து இரங்க வேண்டும். அதற்கு மனம் விரிய வேண்டும். தன் உடம்பை மாத்திரம் எண்ணும் நினைப்பை விட்டு, பிறர் உடம்புகளைப் பற்றியும் நினைக்க வேண்டுமானால், இப்போது தன்னலத்தை மட்டும் சிந்திக்கும் சுருக்கமான நிலையில் உள்ள மனத்தால் இயலாது. இந்த மனத்திலே அன்பு என்ற ஒன்று பிறந்துவிட்டால் அது விரிவு பெறும்.

அன்பின் விரிவு

ஒரு பிரமசாரி கடைக்குப் போய் ஒரு மாம்பழம் வாங்குகிறான். அதை நறுக்கித் தா என்று கடைக்காரனை கேட்டு, அவன் நறுக்கிக் கொடுக்க, கடை வாயிலிலேயே நின்று அந்த மாம்பழத்தைத் தின்று விட்டுப் போகிறான். கல்யாணம் ஆன பிறகு அதே கடைக்குப் போய் ஒரு மாம்பழம் வாங்குகிறான். வாங்குகிற மாம்பழத்தை, நறுக்கித் தரச் சொல்லி அவனே உண்பது வழக்கமாதலால் இன்றைக்கும் கடைக்காரன் அந்த மாம்பழத்தை நறுக்க முந்துகிறான். "அப்பா, அதை நறுக்காதே" என்று சொல்லி மாம்பழத்தை முழுதாகவே வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போகிறான் இளைஞன். ஏன் தெரியுமா? முன்பு அந்த மாம்பழத்தை வாங்கும்போது அவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவு மாத்திரம் இருந்தது. இன்றைக்கோ தன் மனைவிக்கும் அந்த மாம்பழத்தை நறுக்கிக் கொடுக்க வேண்டும்மென்ற அன்பு பிறந்துவிட்டது. முன்பு அவனுக்கு ஒரு வயிறுதான். இன்றைக்கு மனைவியின்மேல் அன்பு மனத்தினால் பிறந்ததனால், வயிறும் இரண்டாக விரிகிறது.

10