பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

எவ்வளவு பாடுபடுகின்றோம்! அப்பொழுதெல்லாம் நம்முடைய உள்ளம் துடிக்கின்றது; துன்பமும் அடைகிறோம்.

"நம் உடம்பில் ஏதாவது நோய் வந்தால்தான் துன்பம் உண்டாகும்; அதை உணரலாம். பிறர் உடம்பில் வருவதை நாம் எப்படி உணர முடியும்?" என்று தோன்றலாம். "எவ்வளவு நெருங்கிய உறவானாலும் உடம்பும் உடம்பும் வேறுதானே?" என்று கேட்கலாம். துன்பம் என்பது மனத்தைப் பொறுத்தது. கையில் இருக்கும் ஒரு கட்டியை டாக்டர் அறுத்துச் சிகிச்சை செய்கிறார். கை துடிப்பதனால் துன்பம் உண்டாவதில்லை. கை துடிப்பதை மனம் அறிந்து கொள்வதால்தான் துன்பம் உண்டாகிறது. "இல்லை, கை துடிப்பதனால்தான் துன்பம்" என்றால் டாக்டர் நமக்கு மயக்க மருந்தை கொடுத்துவிட்டுக் கையை 'ஆபரேஷன்' செய்யும்போது ரத்தம் வருகிறதே, அப்போது துன்பம் தோன்றுகிறதா? இல்லை. காரணம், கையை வெட்டும் போது மனம் அங்கே இணையவில்லை. கையில் தோன்றிய புண்ணில் மனம் இணைந்தால்தான் துன்பம் உண்டாகிறது. ஆகவே, மனத்திலே இணைந்து தோன்றுகின்ற உணர்ச்சியையே இன்பம், துன்பம் என்று சொல்லுகிறோம்.

நம் கையிலே புண் ஏற்படுகிறதை மனம் உணர்கிறபோது துன்பம் உண்டாகிறது. அதாவது மனத்தைச் செலுத்திப் பார்க்கிற போதுதான் துன்பத்தை உணர்கிறோம். அன்பினால் மனம் விரிந்தவர்கள், தம்மைப் போலவே எல்லா உயிர்களையும் பார்க்கின்றவர்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு பசுமாடு துன்புற்றாலும் தாம் துன்புறுவதுபோல உணர்ந்து வருகிறார்கள். ஒரு பசுவின் கன்று தன் மகனுடைய தேர்க்காலில் சிக்கி உயிர் விட, அதனால் அந்தப் பசுமாட்டிற்கு ஏற்பட்ட துன்பத்தைத் தன் துன்பம் போலவே எண்ணியதால் அன்றோ, மனுநீதிச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் வைத்து ஊர நினைந்தான்?
   "எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
   தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே"

என்று தாயுமானவர் சொல்லுகிறார். எவ்வுயிரையும் தன் உயிர் போல எண்ணுவதோடு மாத்திரம் அல்ல; எண்ணி இரங்க வேண்டும். இதைத்தான் சர்வுபூத தயை என்று சொல்வார்கள். தம் உயிரையே

12