பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

 வில்லிபுத்துாரரும், அருணகிரிநாதப் பெருமானும் ஒரு சமயம் வாதம் செய்தார்கள். யார் அந்த வாதத்திலே வெற்றி பெறுகிறாரோ அவர் தோற்றவருடைய காதை அறுப்பது என்பது நிபந்தனை. வில்லிபுத்துரர் இப்படிப் பல பேர்களைத் தோல்வியுறச் செய்து அவர்களுடைய காதை அறுத்துக் கொண்டே வந்தாராம். அவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவே அருணகிரிநாதர் அவரோடு வாதத்திற்குச் சென்றார். கடைசியில் அருணகிரிநாதரே வென்றார். வில்லிப்புத்தூரர்தம் காதை அருணகிரிநாதப் பெருமானிடம் நீட்டி, தாம் தோற்றுப் போய்விட்டதால் அறுக்கும்படியாகச் சொன்னாராம். அருணகிரிநாதப் பெருமான் அவர் காதை அறுக்காமல், "என் பாட்டுக்குக் காதை நீட்டினதே போதும்" என்று சொல்லிவிட்டாராம். அதனாலே கருணைக்கு அருணகிரி என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள்.

இந்தச் சரித்திரம் பிற்காலத்தில் எழுந்தது. வில்லிபுத்துரரின் அற்புதமான பாடலைப் பார்த்தால் அவரை அவ்வளவு முரடர் என்று சொல்ல முடியாது. புலவரைப் பற்றிப் பல கற்பனைக் கதைகள் எழுந்திருக்கின்றன. அத்தகையை கதைகளுள் இது ஒன்று எனத்தான் எனக்குத் தோன்றுகிறது.

'கருணைக்கு அருணகிரி' என்பது வேறு காரணத்தால்தான் அவருக்கு வந்திருக்க வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள் சிறந்த நிலையிலேயே வாழத் தகுதி பெற்றவர். அவர் விரும்பியிருந்தால் பிர்லா போன்ற கோடீசுவரர்கள் பட்டு மெத்தையிலே அவரை உறங்க வைத்திருப்பார்கள். அவ்வளவு சிறந்த நிலையிலே வாழ்வதற்கு வசதியிருந்தாலும் சமுதாயத்தில் யார் மிகத் தாழ்ந்த நிலையிலே இருந்தார்களோ அவர்களுடைய மத்தியிலே வாழ்ந்தார். மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேண்டிய சேவைகளைப் புரிந்தார். அவர்களுக்கு வரும் துன்பங்களைத் தம்முடையனவாக ஏற்றுக் கொண்டார். அதற்கு காரணம் அவருடைய கருணை. பிறருடைய துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் கருணைதான் எல்லாக் கருணையிலும் பெரியது.

பிறருடைய துன்பத்தைக் காணுவது ஒரு கருணை; கண்டு இரங்குவது ஒரு கருணை; அந்த துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொள்வது ஒரு கருணை; அவர்களுடைய துன்பத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு அதைத் துடைப்பது ஒரு கருணை. இப்படிக் கருணை கொஞ்சம் கொஞ்சமாக வளரும்.

15