பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

விளையாடல்களையும் பாடியிருப்பார். எல்லாவற்றையும் கடைசியில் முருகனோடு இணைத்துவிடுவார். திருமாலைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கடைசியில் இத்தகையவனுக்கு மருகோனே என்று பாடுவார். உமாதேவியாரின் பெருமைகளைக் கூறி அப்பெருமாட்டியின் புதல்வோனே என்று முடிப்பார். அவர் பாடல்களில் சமரசநெறி விரவியிருக்கும்.

அவைமட்டும் அன்று. வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களையும் திருப்புகழில் காணலாம். யோகசாஸ்திரத்தில் உள்ள செய்திகளும் வரும். வருணனைகளோ அபாரம். எதைச் சொன்னாலும் கடைசியில் முருகனிடத்திலேதான் வந்து முடியும்.

சில ரெயில் வண்டிகளில் சில சாமான் வண்டிகள் இருக்கும். பிறகு பிரயாணிகள் ஏறிய வண்டிகள் இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து இழுத்துச் செல்ல எஞ்சின் முன்னாலே இருக்கும். அதுபோலவே அருணகிரிநாதர் உபதேசங்களாகிய பண்டங்களை ஒரு வண்டியில் ஏற்றுவார்; திருமால் புகழாகிய மக்களை ஒரு வண்டியில் ஏற்றுவார். முருகன் என்னும் எஞ்சினை மாட்டி விட்டு விடுவார். வண்டித் தொடரில் பலவகையான பண்டங்களும் மக்களும் ஏறியிருந்தாலும் எஞ்சின் மட்டும் மாறுவதில்லை; எஞ்சின் இல்லாமல் ஓடுவதும் இல்லை.

2

கந்தன்

முருகன் என்பது தமிழில் அமைந்த அழகிய பெயர். பெரும்பாலும் வடமொழி தென்மொழி இரண்டிலும் பொதுவாக வழங்கும் நாமம் ஸ்கந்தன் அல்லது கந்தன். கந்தப் பெருமானுடைய வரலாற்றைச் சொல்லும் நூல் கந்தபுராணம். சுப்பிரமணியன் என்ற பெயர் இருந்தாலும் வடமொழியில் கந்தன் என்ற பெயரையே பெரும்பாலும் வழங்குவர். ஸ்கந்தோபநிஷத், ஸ்காந்தபுராணம் என்ற நூற்பெயர்களைப் பார்த்தால் இது விளங்கும். அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி என்று இந்த நாமத்தோடு இணைந்த மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.

21