பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உட்படுத்தும்?" என்று பணக்காரர்கள் கேட்கலாம். புத்தி படைத்தவர்கள் கேட்கலாம். பணம் படைத்தவர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும் பயந்து, "நீங்கள் பணிய வேண்டாம்" என்று வள்ளுவர் சொல்லுவாரா? பொய்யாமொழிப் புலவர் அவர். பணக்காரர்களுக்காக உண்மையை மறைக்க மாட்டார்.

ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சாதி, ஒர் இனம், ஒரு சமயம் என்கின்ற பாகுபாடு இல்லாமலே, உலகத்திலுள்ள மக்கள் எல்லாரும் லட்சிய வாழ்க்கை வாழ்வதற்கு உரிய இலக்கணத்தைச் சொல்கிறவர் அவர் "செல்வர்க்கே செல்வம் தகைத்து" என்கிறார். "செல்வர்க்கே" என்று ஏகாரம் போட்டுச் சொல்வது, "எல்லோரும் வாழ்க்கையில் பணிவாக இருக்க வேண்டும். அவர்களிலும் செல்வம் படைத்தவர்கள் நிச்சயமாகப் பணிவாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது.

நம்மிடம் பணிவு இல்லாவிட்டால் யாராவது நம்மைக் குட்டி உட்கார வைத்து விடுவார்கள். அம்மாதிரியாகப் பணிவது அவமானம். நாமாகப் பணிவதுதான் புகழ்; வெகுமானம். இதனை நமக்கு விநாயகப் பெருமான் அறிவுறுத்துகிறார். "ஆண்டவன் திருக்கோயிலுக்குப் போகும்போது தலை நிமிர்ந்து கொண்டு போகாதே. நான் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். என் எதிரில் நின்று தலையில் குட்டிக் கொண்டு போ" என்று அறிவுறுத்துகிறார். "வருவார் தலையில் தடப டெனப் படுகுட்டுடன்" அவர் உட்கார்ந்திருக்கிறார். அவரைப் பார்க்கின்ற நாம் எல்லோரும் முதலில் குட்டிக் கொண்டு பணிவுடன் போக வேண்டும்.

ஆத்ம சோதனை

தம்மைத் தாமே குட்டிக் கொள்ளுவது, தம்மைத் தாமே சீர்திருத்திக் கொள்ளுவதற்கு அடையாளம். அத்தகையவர்களுக்கு அவர் அநுக்கிரகம் செய்பவர். அதனை அவருடைய சர்க்கரை மொக்கிய கை காட்டுகிறது. சர்க்கரையை மொக்குகிறவர், உண்ணுகிறவர் அவர். அவர் கையில் அது இருக்கிறது. தாம் உண்ணுவதை அடியார்களுக்கும் கொடுப்பார். அதுதானே பிரசாதம்?

42