பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

சுண்டலை விற்றுக் கொண்டிருந்தாள். அதனை வாங்கித் தின்றான். இரண்டு மூன்று நாள் சாப்பிட்டான். உடனே அவனுக்கு உடல் நலிவு வந்துவிட்டது. தலைவலி என்றான்; உடம்பு வலி என்றான். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டுவிட்டான்.

தாய் என்ன நினைப்பாள் 'ஏதோ நல்ல பொருளாகப் பசி நேரத்திற்கு வாங்கிச் சாப்பிடட்டும் என்று இரண்டணாக் கொடுத்தால் இந்தப் பையன் உடம்புக்கு ஆகாத பொருளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது. வாந்தி எடுக்கிறான். இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது' என்றுதானே நினைப்பாள்?

இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். தாய் இரண்டணாக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளையாண்டான் ஊசற் கடலையை வாங்கித் தின்று உடம்புக்குத் தீங்கு தேடிக் கொண்ட போது தான் கொடுத்து அனுப்பிய இரண்டணாவைக் கொடுக்காமல் நிறுத்திவிட்டது போல, ஆண்டவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால், அவன் நம்மை ஊமையாக்கிவிடுவான்.

பொல்லாத பேச்சுக்களில் நான்கு வகை உண்டு. கடுமையாகப் பேசி பிறர் மனம் புண்படும்படி செய்வது ஒரு வகை. பயன் இல்லாத சொற்களைப் பேசுவது ஒரு வகை. ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசுவது ஒரு வகை. பொய் சொல்வது ஒரு வகை. இந்த நான்கு வகையாகப் பேசுவதையும் ஒழித்து இவற்றிற்கு மாறான பேச்சைப் பேச வேண்டும். பிறர் மணம் உவகை கொள்ளும்படி இன்சொல்லைப் பேச வேண்டும்; மெய்யைப் பேச வேண்டும்; புறங்கூறாமல் நேரே நயமாகச் சொல்ல வேண்டும்; பயனுள்ளவற்றையே பேசவேண்டும்.

87