பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடதட கும்பக் களிறு

பத்தை அளிக்கிறது. ஆனால் விநாயகருக்கு உண்டாகிற மதம், பிறருக்குத் தீங்கை விளைப்பதில்லை; அருளாக அது வெளிப்படுகிறது.

அரண்மனையின் வாசலில் யானையைக் கட்டி வைக்கி றார்கள். அதுபோல அரனுக்கு மனையாகிய திருக்கோயிலின் வாசலில் விநாயகராகிய களிறு இருக்கிறது. கருணையென்னும் மதம் பொழிய, அது இருக்கிறது.
   "உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும்
      தறிநிறுவி உறுதி யாகத்
   தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி
      யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
   கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
      களித்துண்டு கருணை யென்னும்
   வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
      நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்"
என்று பரஞ்சோதி முனிவர் அந்தக் கடதடகும்பக் களிற்றைப் பாடுகிறார். அந்த யானை தன்னை அண்டிய பக்தர்களுடைய காரியங்களை எல்லாம் நிறைவேற்றி வைக்கின்ற கருணை உடையது. உள்ளம் என்னும் கூடத்தில், ஊக்கமென்னும் தறியை ஊன்றி, தள்ளரிய அன்பு என்னும் சங்கிலியை உறுதியாகப் பூட்டி அந்த யானையைக் கட்ட வேண்டும். ஆன்மா தன்னிடம் உள்ள அறியாமையை அதற்குக் கவளமாகக் கொடுத்தால் போதும். அதனை மிகக் களிப்புடன் உண்ணுமாம். பிறகு அது கருணையாகிற மதத்தைப் பொழியும்.

ஆகவே, இந்தக் கடதட கும்பக் களிறு, உலகத்திலுள்ள மற்ற யானைகளைப் போன்றது அல்ல. தன்னை வந்து பணியும் மக்களுக்கு அருள் என்னும் மதத்தைப் பொழியும் களிறு இது. இந்த யானைக்கு மூன்று இலக்கணம் உண்டு; தடபடவென மக்கள் போட்டுக் கொள்கிற பெருமான், சர்க்கரை மொக்கிய கையையுடைய பெருமான், கடதட கும்பம் உடைய பெருமான். அவரைப் பணிவுடன் வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் இனிமையான பிரசாதம் கிடைக்கும். பசு போதத்தை அவருக்குக் கவளமாகக் கொடுத்து விட்டால் அவர் கருணை மழை பொழிவார்.

45