பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும்.

மக்கள் எல்லோரும் உபகாரம் செய்கிறார்கள். அவர்கள் செய்கிற உதவிக்கு எல்லை உண்டு. தாம் நினைத்தபடி எல்லாம் உபகாரம் செய்ய வேண்டுமென்றால் அவர்களிடம் மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். தன் குழந்தையைத் தொட்டால் அது உடனே வஜ்ரமாக ஆகிவிட வேண்டுமென்று ஒரு தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடிவதில்லை. அவளுக்கு வெறும் ஆசைதான் இருக்கிறது. ஆசையை நிறைவேற்றும் ஆற்றல் இல்லை. அவளிடம் உண்டாகிற ஆசைகள் பல. அவற்றில் ஒரளவு நிறைவேறுகிறது என்றால் அது ஆண்டவனுடைய சக்தியினால்தான் நிறைவேறுகின்றது. குழந்தைக்கு அவள் உபகாரம் செய்கிறாள் என்று நினைக்கிறோம். கொடுக்கும் கருவி அவள். அவள் மூலமாகக் கொடுக்கிறவன் ஆண்டவன்.

யாரோ ஒருவர் நமக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறார். இறைவனால் தூண்டப்பட்டுக் கொடுக்கிற அவர் இறைவனுடைய அருளாணைக்குரிய கருவியாகத்தான் இருக்கிறார். ஆண்டவன் மற்றவர்களையன்றி அவரை ஒரு கருவியாகக் கொண்டு கொடுப்பதனால் அவருக்கு ஒரு பெருமை உண்டு. அதனால் அவர் மகிழ்ச்சி அடையலாம். நாமும் அவரைப் போற்றலாம். ஆனால் அதனை அவர் நமக்குக் கொடுப்பதற்கு யார் மூல காரணமாக இருந்தானோ அவனை மறந்துவிடக்கூடாது.

தஞ்சாவூரிலிருந்து ஒருவர் நமக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணியிருக்கிறார். அந்த மணியார்டரைக் கொண்டு வந்து தபால்காரன் கொடுக்கிறான். அதனை வாங்கிக் கொண்டு நாம் என்ன செய்கிறோம்? மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமக்கு ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்த தபாற்காரனுக்கு ஒர் இரண்டனாவைக் கொடுத்துப் போகச் சொல்லுகிறோம். ஆனால் அதே சமயத்தில், "அப்பாடி! நம்முடைய கஷ்டம் நீங்கிற்று. சரியான சமயத்தில் உதவி செய்த அந்தத் தஞ்சாவூர்ச் செட்டியாருக்கு என்ன கைம்மாறு செய்வோம்!” என்று எண்ணி உள்ளம் உருகுகின்றோம். இவ்வாறே நமக்கு உபகாரம் செய்கின்றவர்களிடம் நாம் ஓரளவு நன்றி

90