பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஆண்டும் நவராத்திரி பூஜையின்போது பல பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்வது வழக்கம்.

"இந்த ஆண்டு பிராமண போஜனம் வேண்டாம்; ஏழைகளையும் உட்கார வைத்து அன்னம் போட வேண்டாம். சாதத்தை உருட்டி வேண்டுமானால் கையில் கொடுத்து அனுப்பி விடலாம். அதனால் செலவு குறையும்" என்று அந்த ஆண்டு புதிதாக வந்திருந்த திவான் சொன்னாராம். அதனைச் சம்ஸ்தானாதிபதியும் ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த பிராமணர்களும், ஏழைகளும் யாரிடம் சொன்னால் தங்கள் காரியம் நடக்கும் என்று எண்ணி, எங்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள்.

"மகாராஜா அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள். நீங்கள் போங்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று எங்கள் ஆசிரியர் அவர்களுக்குத் தேறுதல் சொல்லி அனுப்பிவிட்டுத் தர்பாருக்குச் சென்றார்கள். அங்கே பல புலவர்கள் இருந்தார்கள்; படித்த அறிவாளிகள் இருந்தார்கள்; வேறு யார் யாரோ வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஐயரவர்கள் மகாராஜாவைப் புகழத் தொடங்கினார்கள். "மகாராஜாவின் பரம்பரைப் பெருமையை என்னவென்று சொல்வது தங்கள் முன்னோர்கள் செய்த தான தர்மங்கள் என்ன! அந்த மரபில் வந்த மன்னர்கள் எல்லாம் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்திருக்கிறார்கள்! பெரியவர்கள் செய்து வந்ததை நிறுத்தக் கூடாது என்ற எண்ணத்தோடு தாங்களும் அறம் செய்கிறீர்கள். போன ஆண்டு இரண்டாயிரம் பேருக்குமேல் நவராத்திரியின்போது உணவளித்தீர்கள். இந்த வருஷம் ஐயாயிரம் பேர்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். தங்களைப் போல யார் இப்படிப் பண்ணப் போகிறார்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டவுடன் அந்த அரசர் அவ்வாண்டும் வழக்கம்போல அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்.

உடம்படுபுணர்தல்

பெரியவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம். எதையும் நேர்முகமாகச் சொல்லாமல் பிரயோக வாயிலாகப் புலப்படுத்

74