பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

நம்முடைய நாக்கு திருந்திவிடும். இந்தப் பாட்டில் ழகர, றகரங்களை மிகுதியாக வைத்திருக்கிறார். தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தான ழகறத்தை நன்றாகச் சுத்தமாக உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பாட்டில் ஏழு ழகரம் வைத்திருக்கிறார்.

அவர் மனத்தில் தமிழைப் பிழையறச் சொல்ல வேண்டும் என்ற கருத்து உதயம் ஆகிறது. அந்தக் கருத்தில், 'ழகர றகரங்களைப் பிழை இல்லாமல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டால், மற்ற எழுத்துக்கள் எல்லாம் தாமே வந்து விடும்; பாட்டைப் பிழை இல்லாமல் படிக்க முடியும்' எனத் தோன்றுகிறது. கருத்துக்கேற்ப வார்த்தைகள் வந்து விழுகின்றன.

மறைமுகமாகப் புலப்படுத்தல்

“ழகரத்தையும், றகரத்தையும் நன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நேரே சொல்லாமல் மறை முகமாகப் புலப்படுத்துகிறார் இந்தப் பாட்டிலே. அப்படிச் சொல்வது ஒரு முறை. இலக்கணமாகத் தனியே ஒன்றை எடுத்துச் சொல்லாமல், தாமே பிரயோகம் செய்து அந்தப் பிரயோக வாயிலாகச் சொல்ல வேண்டியதைக் குறிப்பால் புலப்படுத்துவது ஒரு மரபு. "காலையில் எழுந்து நீராடு; திருநீறு அணிந்து கொள்; இட்டிலி சாப்பிடு; பிறகு என் வீட்டுக்கு வா" என்று நேர்முகமாகச் சொல்லலாம். இது ஒரு முறை. "நீ காலையில் எழுந்திருந்து நீராடி விட்டுத் திருநீறு அணிந்துகொண்டு, இட்டிலி சாப்பிட்டு விட்டு, வெளியே போவாயே, அப்பொழுது என் வீட்டுப் பக்கம் வந்து விட்டுப் போ" என்று மறைமுகமாகவும் சொல்லலாம். இப்படிச் சொன்னாலும், "என் வீட்டுக்கு வரும் போது நீராடி விட்டுவா, திருநீறு அணிந்து வா" என்பதுதான் பொருள். ஆனால் இப்படி மறைமுகமாகச் சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது; நாசூக்கு இருக்கிறது.

எங்கள் ஆசிரியர் அப்படிச் சொல்வது வழக்கம். அந்த முறையை அவர்கள் மணி ஐயர் அவர்களிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள். ஒரு சமயம் ஐயர் அவர்கள் ஒரு சம்ஸ்தானத்திற்குச் சென்றார்கள். அந்தச் சம்ஸ்தானத்தில் ஒவ்வோர்

க.சொ.1-6

73