பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

துவதும் இதைப் போன்ற முறைதான். விதியாகச் சொல்லாமல் பிரயோகத்தில் வைத்துக் காட்டுவதை உடம்படுபுணர்த்தல் என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.

அவ்வாறே அருணகிரிநாதர், "ழகர றகரத்தை நன்றாக உச்சரியுங்கள்" என்று சொல்லாமல் அவ்விரண்டையும் இந்தப் பாட்டிலே மிகுதியாக அமைத்துச் சொல்கிறார்.

இந்தப் பாட்டில் ஏழு ழகரங்கள் இருக்கின்றன என்று முன்னே சொன்னேன். றகரங்களோ பதின்மூன்று இருக்கின்றன. எண்ணிப்பார்த்தால் தெரியும்.

நம் வீட்டிலே நாமே செடிகளை வைத்துப் பயிரிட்டு, மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து ஆண்டவனுக்குச் சாத்துவது என்றால் முடியாத காரியம். மலரைக் கடையிலிருந்து வாங்கி வந்து ஆண்டவனுக்கு அர்ச்சனை பண்ணலாம். அப்படிப் பண்ணும் போது நமக்குச் சிரத்தை இருந்தால், அன்பு இருந்தால், அந்த மலரின் காம்புகளை எல்லாம் கிள்ளிவிட்டுச் சுத்தமான மலராக அர்ச்சனை பண்ணலாம். இதுதான் முறை. அப்படிச் செய்யவில்லை என்றால் சிரத்தை இல்லையென்றே கொள்ள வேண்டும். அதுபோலவே இறைவன்மேல் நம்மால் பாட்டுக்கள் புனைய முடியாவிட்டாலும் பெரியவர்கள் பாடிய பாடல்களை எழுத்துப் பிழையில்லாமல் சொல்ல வேண்டும்.

காலநிலை

ருணகிரிநாதர் காலத்தில் இந்த நாட்டில் கன்னடர்களுடைய ஆட்சி இருந்தது. கன்னடம் பேசும் அதிகாரிகள் அங்கங்கே இருந்தார்கள். "கருநடப்பேர் வெள்ளத்து விழாமல்" என்று வில்லிபாரதச் சிறப்புப் பாயிரம் சொல்வதிலிருந்து இது தெரிய வருகிறது. கன்னடக்காரர்களோடு சேர்ந்து எழுத்தைத் தவறாக உபயோகிக்கின்ற மக்களைப் பார்த்து மனம் குமுறி, அப்படி உபயோகிக்காதீர்கள் என்று சொல்ல எண்ணினாரோ அருணகிரிநாதர் என்று தோன்றுகிறது. இதே நிலை இப்பொழுது இருக்கிறது. நுனி நாக்கிலே பேசுகின்ற ஆங்கிலமொழியின் கலப்பினால் வார்த்தைகளைச் சரியாக நாம் உச்சரிப்பதில்லை. நாமும் நுனி

75