பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1


   "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
    அரவெனப் பூதம் ஐந்தும்
   விலங்கிய விகாரப் பாட்டின்
    வேறுபாடு உற்ற வீக்கம்
   கலங்குவது எவரைக் கண்டால்
    அவர்என்பர் கைவில் ஏந்தி
   இலங்கையில் பொருதார் அன்றே
    மறைகளுக்கு இறுதி ஆவார்.”

"மலர் மாலையில் அரவென்று அஞ்சும்படி பொய்யாக தோன்றுகிற தோற்றத்தைப் போல், ஐந்து பூதங்களும் மாறுபட்டுக் கலந்து காட்டுகிற விகாரத்தின் வீக்கம் ராமனுடைய தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் அகன்று விடுகிறது. கையிலே கோதண்டம் தாங்கி நிற்கின்ற அந்த ராமன் மறைகளுக்கு எல்லாம் இறுதியாக இருக்கும் ஆண்டவன்தான்".

இந்தப் பாட்டில் பிரபஞ்சம் என்ற பெயர் வந்ததற்கு எது காரணமோ அதைக் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

ஐந்து பொருள்களாலானது இந்தப் பிரபஞ்சம். பிரபஞ்சம் என்னும் சேற்றிலே நாம் எல்லோரும் உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சேற்றில்தான் அழகான தாமரை முளைக்கிறது. தாயுமான சுவாமிகள் "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற" ஆண்டவனைக் கண்டார்; பிரபஞ்சச் சேற்றிலே தாமரையைக் கண்ட பெரியார் அவர். அவரைப் போன்றவர்கள் உலகத்திலுள்ள யாவும் இறைமயம் எனக் கண்டு மாயா விகாரத்தில் அகப்படாமல் தெளிவான காட்சி பெற்றவர்கள். "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று அப்பர் அநுபவிக்கிறார்.

அருணகிரிநாதர் சொல்லுகிறார் : "முன் பிறப்பிலும் அவன் கருணையை அடைவதற்கான முயற்சி செய்து புண்ணியத்தைச் சேர்க்கவில்லை. இந்தப் பிறவியிலும் அவன் அருளைப் பெறுவதற்கான தவம் ஒன்றும் செய்யவில்லை. பேறு சற்றும் இல்லாதவன்; தவம் சற்றும் இல்லாதவன். நான் இப்பிரபஞ்சச் சேற்றிலே விழுந்தேன். முருகனுடைய கருணையைப் பெறுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லாத பாவி நான். அவனை நினைப்பதற்கேற்ற பக்குவம் என் மனத்தில் இல்லை. இப்படிப்

52