பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

சிறுபான்மைக் கட்சியினர்; மைனாரிட்டி மெஜாரிட்டிக் குழந்தைகள் நாமே. ஆகவேதான் அவனுடைய குடும்பம் பெரிய குடும்பம் என்று சொன்னேன். பஹு குடும்பியாய் இருப்பவன் என்று பிரபந்த வியாக்கியானக்காரர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லுகிறார்கள்.

எல்லா உலகத்தையும் தன் வீடாகவும், எல்லா உயிர்களையும் தன் குழந்தைகளாகவும் கொண்டுள்ள ஆண்டவனுக்கு இரண்டு குழந்தைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் பிரதிநிதியாகவும், ஆண்டவனுக்கும் பிரதிநிதியாகவும் விளங்குகிறான் குழந்தை முருகன். அவனுக்கும் தந்தைக்கும் வேறுபாடு இல்லை.

முருகன் என்ற குழந்தை கலெக்டர் வீட்டுக் குழந்தையைப் போன்றவன். அக்குழந்தைக்குக் கலெக்டருக்குள்ள சுகம் எல்லாம் உண்டு. கலெக்டர் வீட்டில் பண்ணுகிற பட்சணங்கள் எல்லாம் கிடைக்கும். கலெக்டர் வீட்டுக்கு வருகின்ற எல்லோரும் அக்குழந்தைக்கு மரியாதை பண்ணுவார்கள். ஆனால் அக்குழந்தை அவர்கள் வீட்டுச் சேவகனுடைய குழந்தைகளோடும் விளையாடப் போவான். தகப்பனாருக்குச் சமமாக எல்லாவிதமான கெளரவத்தையும் அனுபவித்தாலும், தகப்பனாரிடம் கைகட்டி நிற்பவர்களோடும் எளியவனாகப் பழகுவான். முருகன் குழந்தைக் கோலத்தோடு இருப்பது இந்த எளிமையைக் குறிக்கிறது.

இறைவனுடைய குழந்தையாகிய முருகனுக்கு இறைவனுக்குரிய மரியாதையாவும் கிடைக்கும். ஆனால் சிவபெருமானைக் காட்டிலும் கருணை மிகுதியாகப் பொழிகின்ற திருவுருவம் அது. சிவபெருமானுடைய அவதாரமேயானாலும் அது மூலத்தைவிட உயிர்களுக்கு அருள் தருவதில் எளிதாயிருக்கிறது. முன் உள்ள வித்தைவிட அதிலிருந்து முளைத்த செடி நிழல் தருவதுபோல மிகவும் எளிமையாக இருக்கிற தன்மையினால் முருகனைக் கலியுக வரதன் என்று சொல்கிறோம்.

ஆற்றுத் தண்ணிரை மேடான பிரதேசத்திற்குக் கொண்டு போக வேண்டுமானால் 'பவர் ஸ்டேஷன்' ஏற்படுத்துவது போல, ஆண்டவனுடைய அருள் வெள்ளத்தைத் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய அளவு அன்புப் பள்ளம் விழாத மக்களுக்கு

55