பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளிகோன் உபதேசம்

சொல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

ஒர் அகதி விடுதியில் பத்து ஆண்கள் இருக்கிறார்கள். தன் கணவனைக் காணாத ஒரு பெண் அங்கே வருகிறாள். ஓர் அதிகாரி அந்தப் பெண்ணிடம், "இவன் உன் கணவனா? இவன் உன் கணவனா?” என்று கேட்டு வருகிறார். "இவன் அல்ல, இவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே வருவாள். அந்தப் பத்துப் பேர்களுள் ஒருவன் அவளுடைய கணவன். அவனைச் சுட்டிக்காட்டி, "இவன் உன் கணவனா?" என்று கேட்கும்போது அவள் மெளனமாகத் தலைகுனிந்துகொண்டுவிடுவாள். அந்த மெளனத்தின் பொருள் என்ன? "இவன் என் கணவன்" என்பதே பொருள். பல பல பொருள்களை விரித்து விரித்துப் பேசுகிற வேதம் இறைவனைப் பற்றிச் சொல்ல வந்த இடத்திலே மெளனம் சாதிக்கிறது.

நேதி

வேதம் மற்றப் பொருளைப் பற்றிச் சொல்லி இறைவனை அவை அல்லாத ஒருவன் என்று கூறி மறைமுகமாக எதிர்மறை வாயிலாகச் சுட்டுகிறது. "ந இதி, ந இதி” என்று சொல்கிறது. 'இது அன்று, இது அன்று' என்று பலபல பொருள்களை எல்லாம் மறுத்து ஒதுக்கிவிடுகிறது. இதை நேதி களைந்து பார்த்தல் என்று வேதாந்திகள் சொல்வார்கள். இதைப் பரஞ் சோதியார் சொல்கிறார்.

"அல்லை ஈதல்லை ஈதென மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித் திளைக்குமிச் சுந்தரன்."

வேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்டவனை நேரே சுட்டாமல், "நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல" என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறதாம்.

எதிர்மறைத் துதி

றைவனை, "இது அல்ல, இது அல்ல" என்று சொல்வது எப்படித் தோத்திரமாகும் என்ற கேள்வி எழலாம். நாம்

275