பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

என்று அருணகிரிநாதர் அநுபூதியில் பாடுகிறார். மெத்தப் படித்து விட்டது காரணமாக, கடவுளே இல்லை; நான்தான் உயர்ந்தவன் என்று பிதற்றி அலையும் நிலைக்கு வந்து விடலாமா? அத்தகையவர்கள் இந்தக் காலத்தில் மட்டும் இருக்கிறார்கள் என்பதில்லை. அந்தக் காலத்திலும் தாருகாவனத்தில் இருந்தார்கள். "ஆண்டவன் என்ன? நான்தான் பெரியவன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வேதம் படித்தவர்கள்; வேள்வி செய்தவர்கள். வேதம் படித்த பிராமணர்கள் என்றாலும் அவர்களுக்கு ஞானம் வரவில்லை. சாமான்ய தர்மங்களைக்கூட அவர்கள் அநுஷ்டிக்கவில்லை. விசேஷ தர்மங்கள் எல்லாம் சாமான்ய தர்மங்களைக் கடைப்பிடித்த பிறகே பயனைத் தரும். சாமான்ய தர்மங்களைக்கூடச் செய்யாதவர்களுக்கு விசேஷ தர்மங்களைச் செய்வதனால் தவறுதான் உண்டாகும்.

அடிப்படையான கடமைகளே சாமான்ய தர்மங்கள். உயிர்களிடத்தில் அன்பு, இறைவனிடத்தில் நம்பிக்கை இவை மிகவும் அடிப்படையானவை. இத்தகைய தர்மங்களைச் செய்யாத அவர்கள் விசேஷ தர்மமாகிய யாகங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கீழே விழுந்து விடும். அதைப் போல அவர்கள், நாம் வேதம் படித்தோம் என்ற செருக்கால் இறைவனை நினையாமல் இருந்தார்கள். எம் பெருமான் அவர்கள் செருக்கை அடக்கினான். அப்போது அவர்கள் யாகம் செய்து பாம்பை வருவித்து இறைவன்மேல் படையாக விட்டார்கள். இறைவன் அதனைப் பற்றிச் சடையின் மேல் வைத்துக் கொண்டான்.

இறைவன் நஞ்சுக்கு நஞ்சாக இருப்பவன்; காலகாலன். அவன் திருமுன் கல்வித் தருக்கு உள்ளவர்களும், கர்மத் தருக்கு உள்ளவர்களும் கர்மத் தருக்கு அடங்கியவர்களாகப் போய் விடுவார்கள் என்பதற்கு அடையாளம் பாம்பு.

கொன்றை அணிந்தோன்

சிவபெருமான் சடையில் உள்ளவையாக அருணகிரிநாதர் காட்டும் பொருள்களில் மூன்றாவது இதழி; இதழி என்பது கொன்றை மலர். கார்காலத்தில் அது மலரும். அதனால் அதை, 'கார் நறுங் கொன்றை" என்று சங்கப் புலவர்கள் சொல்வார்கள்.

60