பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

என்று வள்ளுவர் சொல்கிறார். "திருவள்ளுவருக்கு இசை வராது போலிருக்கிறது. அதனால்தான் அவருக்கு யாழின் இனிமையும் தெரியவில்லை. குழலின் இனிமையும் தெரியவில்லை" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர் கருத்து இன்னதென்று தெரிந்து கொண்டால் அப்படிச் சொல்ல மாட்டார்கள். குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது அவர் கருத்து அன்று. ஒருவன் முயற்சி செய்தால் பத்து ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் பத்து ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய நாடகத்தில் நடிக்கும் நடிகனாக இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம்; யானை மாதிரி பிளிறலாம்; வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேச முடியாது.

குழந்தைக்கு இரண்டு பக்கத் தாடையும் வலுவடைய வில்லை. பற்கள் முளைக்கவில்லை. இவற்றுக்கு மேல், அதன் உள்ளம் அழுக்கடையவில்லை. பற்களும் வரிசையாக முளைத்து, தாடையும் வலுவடைந்து, உள்ளமும் நன்றாக அழுக்கேறி விட்டால் மழலை ஒலி வராது. "கல்லா மழலைக் கணியூறல்” என்று ஒரு புலவர் சொல்கிறார். முயற்சி செய்து கற்றுக் கொள்ளுகிற குழலையும் யாழையும்விடக் கற்றுக் கொள்ள முடியாத மழலையே சிறந்தது; இனிமையானது.

எழுத்து நிறைவு பெறாததனால் மழலை இன்பத்தை உண்டாக்குகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? முழு வார்த்தையையும் பேசத் தெரியாத குழந்தை மழலை பேசுகின்றது; அதைக் கண்டு களிப்படைகிறாள் பெற்ற தாய்; உவகை அடைகிறான் பெற்ற தந்தை. எழுத்து நன்றாகத் தெரியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா? "குழந்தைக்கு ஏதோ என்னவோ!" என்று பயந்து கொண்டு டாக்டரிடம் அழைத்துப்போய்த் தொண்டை, நாக்கு இவற்றைப் பார்க்கச் சொல்கிறார்கள். வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயசில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர்

83