பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

ஒருமைப்பாடு

ந்து பொறிகளும் சேர்ந்து ஒன்றுபட்டு இறைவனுக்குப் பூசை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுமென்ற நினைப்பு வருகிறது. ஆனால் ஐந்து பொறிகளும் அதற்கு விரோதமாக இருக்கின்றன. அவற்றை அடக்கும் திண்மை நம்மிடம் இருப்பதில்லை. நாம் தினமும் பூசை பண்ணுகிறோம். பூசை பண்ணுகிறபோதே, வீதியில் ஏதாவது கூச்சல் கேட்டால் அது என்ன சத்தம் என்று கேட்கக் காது போய்விடுகிறது. இறைவனுக்கு அழகாக அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள் என்பதைக் கேட்டு நாமும் ஆலயத்திற்குச் செல்கிறோம். ஆனால் கோயிலுக்குள் போனால் இறைவனைக் கண் பார்ப்பதில்லை. அங்கே உள்ள வேறு காட்சிகளைப் பார்க்க ஓடி விடுகிறது. பட்டினத்து அடிகள்,

"கையொன்று செய்ய விழிஒன்று நாடக்
கருத்தொன்றுஎண்ணப்
பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால் கமழும்
மெய்ஒன்று சாரச் செவிஒன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ்வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே."

என்று பாடுகிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை

ரு சங்கீதக் கச்சேரி நடக்கிறது. அங்கே ஒருவர் வாய்ப்பாட்டுப் பாடுவார். ஒருவர் மிருதங்கம் வாசிப்பார். ஒருவர் பிடில் வாசிப்பார். ஒருவர் குழல் ஊதுவார். ஒருவர் கஞ்சிராத் தட்டுவார். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு காரியங்களைச் செய்கிறவர்கள்; வெவ்வேறு விதமான இசையொலியை எழுப்புகிறவர்கள். வாய்ப்பாட்டின் ஒலி வேறு. மிருதங்கத்தின் ஒலி வேறு. குழலின் ஒலி வேறு. பிடிலின் ஒலி வேறு. இந்த ஒலிகள் எல்லாம் ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாதவை போல இருக்கின்றன. ஆனால் எல்லாம் சேர்ந்து, ஒரு சுருதியோடு பூர்ணமாகக் கலந்து, ஒரு

147