பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்தத் தேன்

யினால்தானே திருடினான்? வயிற்றுக்கு உணவு கிடைத்திருந்தால் அவன் திருடி இருப்பானா?" என்று எண்ணினான். அவன் குணம் என்னும் குன்றேறி நின்றவன் அல்லவா? அந்தத் திருடன் புரிகின்ற செயலுக்கு அப்பாலே அதற்கு மூல காரணம் இன்னதென்று உணர்ந்தான். ஆகவே, உலகத்திலே இயல்பாகக் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை என்பதாக உணர்ந்தான்.

"குறுகிய மனப்பான்மை கூடாது. விரிந்த மனோபாவம் வேண்டும்" என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். எங்கே ஏறினால் விரிந்த மனோபாவம் வரும்? மேடையில் ஏறினால் வராது. குணம் என்னும் குன்றேறி நிற்பவர்களே விரிந்த மனோபாவம் உடையவர்கள்.

மலைத் தேன்

மேலே ஏற ஏறக் கண்ணில் படுகின்ற காட்சிப் பொருள் விரிந்து போகும். "அடடா இவ்வளவு நாளாக இந்தப் பொருள்கள் நம் கண்ணில் படாதது என்னே!" என்று வியப்புணர்ச்சி மேலிடும்.

முன்னே சொன்ன மனிதன் மலை உச்சிக்குப் போய்விட்டான். உச்சியிலே போய்ப் பார்த்தால் அங்கே சந்தன மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. சந்தன மரமே உயரமானது. அதுவும் மலை உச்சியின் மேலே வளர்ந்து மிக உயர்ந்து ஓங்கி நிற்கிறது. அந்த மரத்தின் உச்சிக் கொம்பிலே யாரும் தொடாததேன் அடை இருந்தது. மனிதர்கள் வாழ்கிற இடத்திலே இருந்திருந்தால் ஒரு நாள்கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நெருப்பைப் போட்டுக் கொளுத்தி, வண்டுகளைக் கொலை செய்து தேனை எடுத்துக் குடித்திருப்பார்கள். இங்கோ மனிதன் கண் படாத மலை உச்சியின் மேலேயுள்ள சந்தன மரத்தின் கொம்பில் அந்தத் தேன் அடை இருந்தது; அந்தத் தேன் எப்படி இருக்கும்?

“தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீந்தேன் போல'

என்று நற்றிணையில் ஒரு பாட்டு வருகின்றது. ஒரு நாயகி உயர் குணங்கள் நிரம்பப் பெற்ற தன்னுடைய நாயகனுடைய அன்புக்கு உவமையாக அதனைச் சொல்கிறாள்.

251