பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கிழவோனே" என்றல்லவா பாடிவிட்டான்? நான் கிழவனா? என்று அவனுக்குக் கோபம் வந்ததாம். உடனே, "என்னை நீ கிழவன் என்று பாடலாமா? என்று நக்கீரனைக் கேட்டானாம். "இல்லை சுவாமி. நான் அப்படிப் பாடியது தப்பு, தப்பு” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு,

“என்றும்
இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத்து உறை"

என்று பின்பு வெண்பாப் பாடினார் என்று அந்தப் புலவர் சொல்கிறார்.

திருமுருகாற்றுப் படைக்குப் பின்பு பத்து வெண்பாக்கள் இருக்கின்றன. அந்த வெண்பாக்கள் பக்திச் சுவை நனி சொட்டுவனவாய் உள்ளன. முதல் வெண்பா,

"குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத்து உறை"

என்பது. இந்த வெண்பாவை நக்கீரரே பாடியிருக்கிறார் என்ற கருத்தின்மேல் எழுந்த கதை அது.

எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அந்த நூலின் முடிவில் அந்த நூலைப் படிப்பவருக்கு என்ன பயன் உண்டாகும் என்று சொல்வது வழக்கம். பாராயண நூல்களுக்குப் பயன் இருக்கும். வடமொழியில் பலசுருதி என்று சொல்வார்கள். ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகங்கள் எல்லாவற்றுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறார். திருமுருகாற்றுப் படைக்கு எந்தவிதமான பயனும் சொல்லப்படாததைக் கண்டு பிற்காலத்தில் வந்த புலவர்களில் யாரோ ஒருவர் அந்தப் பத்துப் பாடல்களையும் பாடி அவற்றோடு சேர்த்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

"நக்கீரர் தாம்உரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தாம்நினைத்த எல்லாம் தரும்"

186