பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

நோயைக் குணப்படுத்துவார். ஆனால் அந்த டாக்டருக்கு நோய் வந்தால் அவருடைய நோயைக் குணப்படுத்துபவர் மிகவும் கெட்டிக்காரராக இருக்க வேண்டும் அல்லவா?

அதைப்போலக் கங்கை எல்லோருடைய அழுக்கையும் போக்கிப் புனிதமாக்குகிறது. ஆனால் அந்தக் கங்கையே அழுக்கடைந்தபோது, புனிதம் நீங்கியிருந்தபோது அதனைத் தன் புரிந்த சடைமேல் ஏற்று மீட்டும் புனிதம் ஆக்கியன் இறைவன் என்று அப்பர் புலப்படுத்துகிறார்.

"புரிசடைமேல் புனல்ஏற்ற புனிதன் தான்காண்”

என்பது அவர் வாக்கு ஆண்டவனுடைய சந்நிதியில் ஆணவம் அடங்கும் என்பதற்கும் கலக்கம் தெளியும் என்பதற்கும் அடையாளம் ஆறு.

அரவாபரணன்

அவனது சிவந்த சடைமேல் இருக்கும் மற்றொரு பொருள் பணி (பாம்பு). அது எதைக் குறிக்கிறது? -

மெத்தப் படித்தவர்களுக்குத் தலை நிமிர்ந்து போய்விடும்.
   "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
   கெழுமையும் ஏமாப் புடைத்து"
என்கிறார் வள்ளுவர். நல்ல முறையில் படித்திருந்தால், கல்வியால் பயன் என்ன என்பதை உணர்ந்து படித்திருந்தால், ஏழு பிறப்புக்கும் உதவுமாம்.

ஆனால், படித்தவனுக்கு செருக்கு வந்தாலோ யாரும் சமாளிக்க முடியாது. அதனால்தான்,
   "கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்"
என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.
   "கல்லாத பேர்களேநல்லவர்கள் நல்லவர்கள்
   கற்றும்அறி வில்லாதஎன் கர்மத்தை என்சொல்வேன்"
என்று தாயுமானவர் பாடுகிறார்.


   "கலையே பதறிக் கதறித் தலையூ
   டலையே படுமா றதுவாய் விடவோ?”

59