பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

என்ற முளையை அடித்துத் தொடர்புபடுத்திவிட்டு அதனதன் இச்சைப்படி போக விட வேண்டும். ஓட ஓடக் கயிறு சுற்றிக் கொள்ள, கடைசியில் மாடு முளைக்கு அருகிலேயே வந்து படுத்துக் கொள்வதுபோல, கடைசியில் புலன்களாகிய மாடுகள் ஆண்டவன் என்ற முளைக்கு அருகிலேயே வந்து படுத்து விடும்; செயலொழிந்து விடும்.

இது மிகவும் அருமையான காரியம் அன்று. ஒரு குழந்தை எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கிறது. நாம் ஏதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வைத்துவிட்டுப் போனால் அதனைக் கிழித்து விடுகிறது. "அதைக் கிழிக்காதே; அடிப்பேன்" என்று கோபித்துக் கொண்டால் நம்மிடம் இருக்கும் பயத்தில் அப்போதைக்கு அது அதனைக் கிழிக்காமல் இருக்கும். நாம் கொஞ்சம் அப்புறம் போனால் அதைக் கிழித்துவிடும். இதற்கு என்ன செய்வது? அந்தக் குழந்தையை கிழிக்காதே என்றால் கிழிக்கின்ற சுபாவம் உள்ள அதனால் எதையும் கிழிக்காமல் இருக்க முடியாது. ஆனால், "நன்றாகக் கிழி, இங்கே நார் இருக்கிறது. கிழித்து வை" என்று சொல்ல வேண்டும். குழந்தையின் கிழிக்கிற கை அந்த நாரைக் கிழிக்கிறது. ஆனால் கிழிய வேண்டியது கிழிகிறது.

அதைப்போலப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிற புலனைப் பார்க்காதே என்று சொல்லாமல், "இங்கே ஆண்டவன் படம் இருக்கிறது; அதைப் பார்" என்று சுட்டிக் காட்ட வேண்டும். கேட்க வேண்டுமென்று விரும்புகிற பொறியைக் கேட்காதே என்று சொல்லாமல், "இங்கே திருப்புகழ் பாடுகிறார்கள்; அதனைக் கேள்" என்று சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் பொறிகள் தம் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் அவை யாவும் இறைவனோடு தொடர்புடைய அநுபவங்களாகவே அமைகின்றன.

புலன்களாகிய யானைகளை இந்த முறையில் நம்முடைய அறிவினாலே ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த யானைகளை நம் விருப்பப்படி நடக்க வைக்க, அறிவாகிய அங்குசம் நம்மிடம் இருக்கிறது. அந்த அங்குசத்தினால் அவற்றை அடக்கி, இறைவன் என்ற முளையை அடித்து, அதைச் சுற்றிச் சுற்றி எல்லா விதமான இன்ப அநுபவங்களையும் அடையச் செய்தால், அவை

142