பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வெறுந்தனியை" என்னும்போது உபநிஷத எல்லையில் நின்று பேசுகிறார். "தெளிய விளம்பியவா!" என்னும்போது அநுபவத்தை நினைந்து வேசாறும் நிலையில் இருக்கிறார்.

"சொல்லுகைக் கில்லையென்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா" என்று தொடங்கும் போதே வியப்புணர்ச்சியில் மூழ்கிவிடுகிறார். அடுத்தபடி வள்ளி நாயகியினிடம் இறைவன் காட்டிய காதலை நினைந்து, "இகல்வேலன், நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய், வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல் வல்லபமே!” என்று பாடுகிறார்.

மூன்றாவது பாட்டை வள்ளிநாயகியை முதலில் நினைத்து, "தேனென்று பாகென்று உவமிக் கொணா மொழித் தெய்வவள்ளி, கோன்” என்று ஆரம்பிக்கிறார். பிறகு தமக்கு உபதேசித்ததைச் சொல்ல இயலாதே என்று வேசாறுகிறார். "எனக்கு உபதேசித்த தொன்று உண்டு, கூறவற்றோ?" என்கிறார். பிறகு சொல்ல முயல்வாரைப்போல முயன்று, முடியாதென்பதையே புலப்படுத்துகிறார்: "வாணன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று, தானன்று, நானன்று, அசரீரியன்று சரியன்றே" என்று சொல்வதில் அக்கருத்தையே காண்கிறோம்.

பின் மூன்று பாட்டிலும் அருணகிரியார் புலமைத் திறனாலும் பக்தி உரிமையாலும் செய்யும் கற்பனை விரிகிறது. மயில் நடக்கும்பொழுது விளையும் விளைவுகளை ஒரு பாட்டிலும், சேவல் சிறகடிக்கும்பொழுது விளைவதை ஒரு பாட்டிலும், திருவரைக் கிங்கிணி ஓசையினால் விளைவதை ஒரு பாட்டிலும் கூறுகிறார். இந்தக் கற்பனைக் காட்சிகள் வேறு ஒருவர் கூறியன அன்று. அருணகிரியாரே மனக் கண்ணிலே உருவாக்கிக் கண்டு கூறுபவை. கந்தபுராணத்திலோ முருகன் வரலாற்றைக் கூறும் வேறு நூலிலோ இந்த நிகழ்ச்சிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்துக் காண இயலாது.

கற்பனையானாலும் அவற்றினூடே ஒரு கருத்தும் இருக்கும். சமய நூல்களில் இப்படி ஒரு குறிப்பு இருப்பதைப் பழைய உரையாசிரியர்களின் உரைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

242