பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

குறிப்புக் கலைகளே (Suggestive Art). ஆதலின் புராணக் கதைகளின் சிறப்பை அறிய வேண்டுமானால் மேலெழுந்த வாரியாகப் பார்த்து, "இது என்ன பைத்தியக்காரக் கதை" என்று புறக்கணிக்கக் கூடாது. "இதன் கருத்து யாது?" என்று கூர்ந்து ஆராய வேண்டும். நம்முடைய சமய உண்மைகளை நிலைக்களமாக வைத்துக் கொண்டு ஒப்பு நோக்க வேண்டும். அப்போது உள்ளுறை விளங்கும். நுண்பொருளைப் பருப்பொருளாகக் காட்டியிருக்கும் கலைத்திறத்தைப் பாராட்டிப் போற்றும் நிலைக்கு வந்துவிடுவோம்.

இப்புத்தகத்தில் சில இடங்களில் புராண வரலாறுகளின் உள்ளுறையை ஒரளவுக்கு விளக்கியிருக்கிறேன். சொற்பொழிவுகளினிடை விளக்கியவையே அவை.

இலக்கிய சம்பந்தமான செய்திகளையும் அங்கங்கே விளக்கியிருக்கிறேன். ஐந்திணையைப் பற்றிய செய்திகள், முருகனைக் குறிஞ்சித் தெய்வமாக வைத்துப் போற்றும் மரபு, விழுப்புண், கள வேள்வி முதலியவற்றை இலக்கிய இலக்கண நூல்களிற் கண்ட பொருள்களோடு வைத்துக் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன்.

நான் எழுதியுள்ள திருமுறை மலர்கள் என்ற வெளியீடுகளிலும், வேறு சில நூல்களிலும் காணும் கருத்துக்கள் சில இதில் அங்கங்கே வந்திருக்கலாம். ஒரு கருத்தைப் பல இடங்களில் விளக்க வேண்டி வரும்போது இது மாற்ற முடியாதது என்பது அன்பர்களுக்குத் தெரியும்.

சமய சம்பந்தமான கருத்துக்கள் நுட்பமானவை. அவற்றை விளக்குவது எளிதன்று. பெரியோர்களின் திருவாக்குகளை மேற்கோள் காட்டினால் மாத்திரம் போதாது. ஆதலின், வாழ்க்கையில் நாம் நேரே அறியும் நிகழ்ச்சிகளை உவமையாக வைத்துப் பல கருத்துக்களை விளக்கியிருக்கிறேன். பழம் புலவர்கள் கூறுவனவற்றைப் புதிய முறையில் அமைத்துக் காட்டும் இடங்களும், முழுதும் புதியனவாகவே உவமை கூறி விளக்கும் இடங்களும் இதில் உண்டு.

இவை சொற்பொழிவுகளானமையால் ஒரு பொருளைப் பல வகையில் விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியமாயிற்று.

126