பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்' என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் ஜில்லென்று விழுகிறது. காரணம்? அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள்.

இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்ல்ப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் தன் பொருளாகிய இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.

நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால் பெரியவர்கள் இனிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஏதோ சம்பிரதாயத்திற்குச் சொல்லியிருக்கலாமோ?’ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும்; அவர்கள் சொன்னது உண்மையென்று தெரியும்.

மாணிக்கவாசகர் பாட்டை இராமலிங்க சுவாமிகள் அநுபவித்தார். எப்படி?
   "வான் கலந்த மாணிண்க வாசகநின் வாசகத்தை
   நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
   தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்தே
   ஊன்கலந்தென் உளங்கலந்தே உவட்டாமல் இனிப்பதுவே"

என்கிறார். அவருக்கு மட்டும் இனிப்பானேன்? நமக்கு அப்படி இனிக்காமற்போவது ஏன்?

$35