பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகள் கனவில் தோன்றுகின்றன.

கனவிலே ஆண்டவனைக் காண வேண்டுமென்றால் நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு ஆண்டவனது நினைவு எப்படி வரும்?

பயத்தால் அலறும்போது, "அம்மா, அப்பா!" என்று அலறுகிறோம்; "ஐயோ!" என்று கூவுகிறோம். அப்படிக் கூவிப் பழக்கம் ஆகிவிட்டது. அப்போது ஆண்டவனை அழைப்பதில்லை. அந்தப் பழக்கம் திடீரென்று நம்மிடம் வராது. பலநாள் பழக்கத்தால் வர வேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூர்த் தியாகேசரிடம் மிகுதியான அன்பு கொண்டவர். அவர் திருவொற்றியூர் வந்தார். தாம் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை எனச் சபதம் செய்து கொடுத்துவிட்டுச் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை. "சங்கிலி நாச்சியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தால் என்ன?" என்று புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறியதால் அவர் கண்கள் குருடாகிவிட்டன. அப்போது இறைவனை நினைந்து அவர் புலம்புகிறார். 'சுவாமீ, உன்னை நான் எப்போதும் நினைக்கிறவனாயிற்றே. தடுக்கி விழுந்தாலும் உன் திருநாமத்தைச் சொல்வதையல்லாமல் ஐயோ, அம்மா, அப்பா என்று எனக்கு சொல்லத் தெரியாதே! என் கண்ணுக்கு ஒரு மருந்து சொல்ல மாட்டாயா?" என்று கதறுகிறார்.
   "அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
     அதுவும் நான்பெறற் பாலதொன் றானால்
   பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்!
     பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்;
   வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்
     மற்று நான்அறியேன்மறு மாற்றம்;
   ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
     ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே!"


93