பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உபமானமாக வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எப்படி இனிக்கும் என்பதை அநுபவத்தினாலேதான் அறியலாம். அநுபவத்தினால் அறிந்து கொள்வது தெளிந்து கொள்வது ஆகும். அறிவினாலே அறியப்படுவனவற்றைப் பிறருக்குச் சொல்ல முடியும். அநுபவத்தினாலே உணர்கிறவற்றை யாருக்கும் சொல்ல முடியாது. தெரிந்த பல பொருள்களை அநுபவத்தில் அடையாமல் இருக்க முடியும். தெளிய அறிந்தேன் என்றால் அநுபவத்தினாலேயும் அதனைப் பெற்றேன் என்று பொருள். ஆறுமுகமுடைய தேசிகனின் திருவருளினாலே நான் அருளொளி பெற்று, அதன் எல்லையைக் கடந்து, பூத எல்லையைக் கடந்து, இட எல்லையைக் கடந்து, தனக்குச் சமானம் இல்லாத தன்மையில் இருக்கின்ற ஒன்றை, அன்பினாலே விளைந்த ஆனந்தமாகிய தேனை நான் பெற்றேன். அது வெறும் பாழைப் பெற்ற தனி. அதனை நான் பெறம்படியாக, அவன் உபதேசம் செய்தான். நான் தெளியும்படியாக விளம்பினான் என்று அருணகிரியார் சொல்கிறார்.

ஒளியில் விளைந்த உயர்ஞான
பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத்
தேனை, அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுகம்
ஆறுடைத் தேசிகனே!

(அருள் என்னும் ஒளியில் புதியதாகத் தோன்றிய உயர்ந்த ஞானமாகிற மலையின் உச்சியில் அன்பிலே விளைந்ததாகிய ஒப்பற்ற ஆனந்தம் என்னும் தேனை, கால எல்லையற்ற அநாதியில், இட எல்லையற்ற வெளியில் உண்டான வெறும் சூனியத்தைப் பெற்ற வெறும் தனியான அநுபவ நிலையை நான் அநுபவத்தால் உணரும்படி முகம் ஆறுடைய குருநாதன் உபதேசம் செய்தவாறு என்ன வியப்பு

ஒளியென்றது அருளை. பூதரம்-மலை. அளி-அன்பு. வெளி-ஆகாசம். விளம்பியவா-விளம்பியவாறு என்னே என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க வேண்டும். தேசிகன்-குரு)

270