பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

ஆண்டவன் நமக்கு அருள் செய்யவில்லை என்று குற்றம் சொல்வதற்கு முன்னால், இருதயத்தோடு ஒட்டி, உள்ளுருகி இறைவனை அழைக்கக் கூடிய நிலை நமக்கு வர வேண்டும். அப்படிக் கூப்பிடும் வன்மை இருந்தால் ஆண்டவன் நமக்கு அருள் கொடுக்க ஓடி வரக் காத்திருக்கிறான். இதனை நமக்கு நிரூபிக்கிறாள் வள்ளியெம்பெருமாட்டி. அவள் குறத்தி வேஷத்தில் இருந்தாலும் எம்பெருமானுடைய நினைப்போடு இருந்தாள். முருகனையே நினைக்கிற சாதி அவள் பிறந்த சாதி. குறச்சாதியினர் என்ன செய்வார்கள் தெரியுமா? சங்க நூல் சொல்கிறது. நிலத்தில் தினைப் பயிர் விளைந்தால் விளைந்த பயிரின் முதல் கதிரை அறுத்துக்கொண்டு போய் இறைவன் திருக் கோயிலில் கட்டிவிட்டு வருவார்கள்; அல்லது ஆண்டவனுக்குப் படைப்பதற்காக அதனைத் தனியாகச் சேமித்து வைப்பார்கள். எந்தப் புதிய பொருளையும் முருகனுக்கே உரிமையாக்குவது அவர்கள் வழககம்.

"கடியுண் கடவுள்"

என்று குறுந்தொகையில் ஒரு பாட்டு கூறுகிறது. முதல் முதலாக விளைவது ஆண்டவனுக்கு உரியது. புதிதாக விளைந்ததை உண்ணும் கடவுள் முருகன். எல்லா வகையிலும் முருகனையே நினைந்து வாழ்கின்ற குறச்சாதி மக்களுக்கிடையே வாழ்ந்த வள்ளி முருகனை நினைத்தாள். அவளிடம், தான் இன்பம் நுகர வந்தவனைப்போல முருகன் ஓடி வந்தான். அவள் அவனிடம் போகவில்லை.

கருணை மலிவு

காய்கறிக் கடைக்குப் போய் நாம் கத்தரிக்காய் வாங்கி வருகிறோம். சில சமயங்களில் சரக்கு மலிந்து போனால் காய் கறிக்காரி வீட்டு வாசலிலேயே காயைக் கொண்டு வந்து விற்கிறாள். அதனை வாங்கிச் சமைத்து உண்கிறோம். சரக்கை விற்று லாபம் பெறக் கருதி வந்தவளைப் போல அவள் வந்தாலும், அதனால் நன்மை அடைகிறவர் யார்? அதனை வாங்கிச் சுவைத்து உண்பவர்களாகிய நாம் அல்லவா? அதனைப் போல, அருள் மலிந்திருக்கிற முருகப்பெருமான், தன்பாலுள்ள அருளைக் கொடுக்க வள்ளியெம்பெருமாட்டி வாழ்ந்த தினைப்

2O3