பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கவிஞன் கலை

தாவது பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் உள்ளபடியே சொன்னால் அந்தப் பொருளில் கவர்ச்சி இராது. அதைச் சுற்றி வளைத்து வருணனைகளோடு அழகுபடுத்திச் சொன்னால் சுவை பிறக்கும். அழகான பொருளை அலங்காரம் பண்ணி வைக்கும்போது அதனைத் தரையில் வைக்க மாட்டார்கள். அடியிலே அழகான பீடம் போட்டு, அதனையும் அலங்காரம் செய்து அதன்மேல்தான் வைப்பார்கள். நவராத்திரி சமயத்தில் ஒருவர் வீட்டில் ஐந்து படி கட்டினார்கள் என்றால், அடுத்த வீட்டில் ஏழு படி கட்டி, ஏழாவது படியின்மேலே ஆண்டவன் விக்கிரகத்தை அலங்காரம் பண்ணி வைக்கிறார்கள். அப்படித் தான் கவிஞன் தான் சொல்வதைப் பல படிகளைக் கட்டி உயரத்தில் வைக்கிறான்.

திரிபுர சங்காரம்

ஆண்டவன் திருக்கரத்திலுள்ள வேலின் பெருமையைச் சொல்ல வந்த அருணகிரிநாதர் அதனை அழகாகச் சொல்கிறார். முருகன் தன் கையிலுள்ள வேலினால்தான் சூரனைச் சங்காரம் பண்ணினான். அவன் தகப்பனார் யார் தெரியுமா?
   தேர்அணி இட்டுப் புரம்எரித்தான்

"தேர் அணி இட்டு' என்றால் தேரை அலங்காரம் பண்ணி என்று பொருள். சிவபெருமான் முப்புரங்களைச் சங்காரம் பண்ணினான். பறக்கும் கோட்டைகள் மூன்று இருந்தன. இரும்பாலான கோட்டை, வெள்ளியால் ஆன கோட்டை, தங்கத்தாலான கோட்டை ஆகிய மூன்றையும் முருகப் பெருமானுடைய தந்தை எரித்தான். அந்த மூன்று கோட்டைகளையும் உடைய மூன்று அசுரர்கள் மிக்க துன்பத்தைப் பிறருக்கு அளித்து வந்தார்கள். அதனால் அவர்களுடைய புரங்களை அழித்தான்.

உடம்பினாலும், உள்ளத்தினாலும் அசுரர்களாக இருந்தவர்களைப் பற்றிப் புராணம் சொல்கிறது. உள்ளத்தினால் அசுரராக இருப்பவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. தன் காரியங்களால் தானே இன்பம் அடைகிறவன் மனிதன்; தன் காரியங்களால் தானும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்பவன் தேவன்;

104