பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேவற் பதாகை

புரட்டிப் பார்க்கிறான். இன்றைக்கு அவனது உள்ளத்தில் புடைவை கட்டிக் கொள்ளும் பெண்ணிடம் அன்பு மீதுர்ந்து நிற்பதனால் அவனது நாட்டம் புடைவைகளின்மேல் செல்கிறது. அதை வாங்கிக் கொடுத்து, அவள் உடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்கிறான். இத்தனை நாளும் அவன் அந்தப் புடைவைகளைப் பார்த்தது இல்லையே என்றால், இத்தனை நாளும் அவன் புடைவை கட்டிக் கொள்பவளுடன் பழகவில்லை. அவன் அன்பு அவள்பால் சென்றது முதல் அவன் பார்வையும் அவளைச் சுற்றிச் சூழ இருக்கிற பொருள்களிடத்தில் செல்கிறது. அது மனித இயல்பு.

முருகப்பெருமானை நினைக்காதவர்களுக்குக் கோழி கூவுவதில் பொருள் ஒன்றும் இல்லை என்றே தோன்றும். ஆனால் அவன்மீது அன்பு சுரக்க ஆரம்பித்தவுடன் கோழி கொக்கறு கோ என்று கூவினால் முருகன் திருநாமத்தையே சொல்வதாகத் தோன்றும். ஒவ்வொருவரும் தம் தம் மன இயல்புக்கு ஏற்ற வகையிலே எல்லாப் பொருள்களையும் உணர்ந்து கொள்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஹரதத்தர் மனப்பண்பு

ஹரதத்த சிவாசாரியார் என்ற சிவபக்தர் கஞ்சனூர் என்ற ஊரில் இருந்தார். அவர் பெரும் புலவர்; மிகப்பெரியவர். அவர் ஒரு நாள் கோயிலுக்குத் தம் சீடர்களுடன் போனார். அங்கே கோயில் தாசியைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தர்மகர்த்தர் அடித்துக் கொண்டிருந்தார். அவள் அடி தாங்க முடியாமல் அழுதாள். "ஐயோ! பாவம் இவளை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்?" என்று ஹரதத்தர் கேட்டார். அதற்கு அந்தத் தர்மகர்த்தர், "இவள் இரண்டு மூன்று நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப் போய் விட்டாள். கடவுளுக்கு யார் சேவை செய்வது? சொல்லிக் கொள்ளாமல் இவள் போகலாமா? அதற்காகத்தான் அடிக்கிறோம்" என்றார். அதைக் கேட்டவுடன் ஹரதத்தர் விசித்து விசித்து அழுதார். உடன் இருந்தவர்களுக்கு இவர் ஏன் இப்படி அழுகிறார் என்று தெரியவில்லை. வீட்டிற்கு வந்த பின் அவருடைய மாணர்க்கார்கள், "சுவாமி, நீங்கள் ஏன் அப்பொழுது அழுதீர்கள்?"என்று கேட்டார்கள். அதற்கு அவர், "கடவுளுக்குச் சேவை செய்யவில்லை என்று தர்மகர்த்தர்

331