பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வாழ்கின்ற பேட்டைக்கு ஒரு நல்ல அதிகாரி வருகிறார். அவருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்து அளிக்கிறோம். 'உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதுபோல நீங்கள் வாங்குவது இல்லை; உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது போல நீங்கள் செய்வது இல்லை; அவர்கள் சொத்துத் தேடிக் கொண்டதுபோல நீங்கள் தேடிக் கொள்ளவில்லை" என்று சொல்கிறோம். அவருக்கு அது இல்லை, இது இல்லை என்று சொன்னாலும் அவை அவருக்குப் பெருமையையே உண்டு பண்ணுகின்றன. குற்றம் இல்லாமல் இருப்பதே பெரிய குணம். "உங்களிடத்தில் இந்தக் குற்றங்கள் இல்லை" என்று சொல்வதே அவரிடத்தில் நிறையக் குணங்கள் இருக்கின்றன என்று துதித்தது ஆகும்.

இறைவனைப் பற்றி வரையறை செய்யப் புகுந்து மேலும் மேலும், "இதுவா, அதுவா?' என்று கேட்கும் கேள்வி வளர்ந்து கொண்டே போகும். அது அல்ல; அது அல்ல என்று விடையும் எல்லையின்றி விரிந்துகொண்டே போகும்.

வேதம் ஏன் அப்படி அவன் அல்ல என்று சொல்ல வேண்டும்? அவன் அல்லாத பொருளை அவன் என்று நினைக்கிறோம். ஞான விசாரத்தினால், "அது அவன் அல்ல; அது அவன் அல்ல" என்று தெரிந்து விலகிக் கொண்டே வந்தால், அதுபவப் பொருளாக அவன் இருப்பதை உணரலாம். காலத்தினாலும், இடத்தினாலும் வளர்ந்து வரும் பொருள் அத்தனையும் அவன் அல்ல என்று சொல்ல முடியும். அதனால்தான், "இது அல்ல, இது அல்ல" என்று சொல்லிச் சொல்லி அதற்கு முற்றுப் புள்ளியே இல்லாமல் இளைத்துப் போய் வேதம் நிற்கிறதேயொழிய, இவன் இத்தகையவன் என்று திட்டமாகச் சொல்லவில்லை.

அன்மைச் சொல்

வேதம் சொல்லுகிறதைப் போலவே அருணகிரியார் அன்மைச் சொல்லால் இந்தப் பாடலைச் சொல்கிறார். "ஆண்டவன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று முதலில் சொல்கிறார். "அந்த ஒன்றைச் சொல்லுங்கள்" என்று சொன்னால், "அது அன்று; இது இன்று" என்று அடுக்குகிறார்.

276