பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அவன் நாமத்தை உள்ளத்தோடு கலந்து, உணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பழகினால் மெளன நிலை தானே சித்திக்கும். தர்மபத்தினியுடன் இல்லறம் நடத்தி வருகின்றவனைச் சந்நியாசிக்குச் சமமானவன் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் பேச்சைத் தவிரப் பிற இழிவான, அவலமான பேச்சுக்களைப் பேசாமல் இருப்பது மெளனத்திற்குச் சமானம். இந்த நிலையை அடுத்து உள்ளத்திற்குள்ளேயே இறைவன் நாமத்தைச் சொல்லும் மெளன நிலை வரும். அப்பால் சொல்லுகைக்கு இல்லை என்று சும்மா இருக்கும் நிலை வரும்.

பேசப் பேச இனிக்கிற பொருள் ஆண்டவன். ஆண்டவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அந்தப் பேச்சு முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும். மெளனம் அநுபவத்திற்கு அறிகுறி.

ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள். வாசலில் கணவன் வருகின்ற காலடி ஓசை கேட்ட மாத்திரத்தில் வாய் அடங்கி விடும். இதைப் போலவே, இன்ப அநுபவம் தலைப்படும்போது தவ நெறியில் மோனம் தலைப்படும். அதுவரைக்கும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

மோனமும் அநுபவமும்

ரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண்டாகிறது. போகும்போது, "உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறாமல் கடிதம் போடுங்கள்" என்று சொல்லி அனுப்புகிறாள். அவளுக்குத் துணையாக அடுத்த வீட்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தன் தலைவனுடைய குணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாளாயின; கடிதம் ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அவளுக்கு ஒரு யுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து வரவில்லை. தலைவிக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம்கூடப் போடுவதில்லை. வரட்டும் சொல்கிறேன்; என்ன பண்ணுகிறேன்

300